- சென்னை
- அய்யர் லான்முட்
- தகவல் தொடர்பு துறை
- ஆயர் விளக்கு
- சென்னை அயன் விளக்கு கிரீம்ஸ் சாலை
- சென்னை அயன் விளக்கு
- தின மலர்
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்திய கால் சென்டரில் தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சிம் டூல்ஸ் பாக்ஸ் உள்ளிட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் முருகேசன் நாயக்கர் என்ற பெயரில் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் ‘ஆல்செட் பிஸ்னஸ் சோலிஷன்’ என்ற பெயரில் தனியார் கால் சென்டர் இயங்கி வருகிறது. இந்த கால் சென்டரை கன்னிராஜ் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
கால் சென்டரில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஐடிஎப்சி, பஜாஜ் பைனான்ஸ் போன்ற வங்கிகளின் கிரிடிட் கார்டுகள் மற்றும் பர்சனல் லோன் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் போன் செய்து கடனை திரும்ப செலுத்த கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்த நிறுவனத்தில் 800 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலும், ஒன்றிய அரசின் விதிமுறைகளை மீறி ஒரே நிறுவனத்தின் பெயரில் பல நூறு சிம்கார்டுகள், சிம் டூல்ஸ் பாக்ஸ் பயன்படுத்தி லாபம் பெறும் நோக்கில் இயங்கி வந்துள்ளது. இதுகுறித்து வோடோ போன் நிறுவனத்தின் நோடல் அதிகாரி பிரபு ஒன்றிய தகவல் தொடர்புத்துறையில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, ஒன்றிய உளவுத்துறை ஐபி டிஎஸ்பி பவான் மற்றும் தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் 5 பேர் அதிகாலை முதல் இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையின் போது, முறையாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அருணுக்கு தகவல் தெரிவித்து, உரிய போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இந்த சோதனையில் சட்டவிரோதமாக கால் சென்டரில் பயன்படுத்தி வந்த தொலைத்தொடர்பு சாதனங்களான 83 சிம் டூல்ஸ் பாக்ஸ், ஒரு மானிட்டர், சிபியூ பறிமுதல் செய்தனர். மேலும், தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் முறைகேடு தொடர்பாக கால் சென்டர் நிறுவனத்தின் உரிமையாளர் கன்னிராஜ், பொறுப்பாளர் உமாபதி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ஆயிரம் விளக்கு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சட்டவிரோதமாக தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்திய கால் சென்டர் நிறுவனத்தில் சோதனை appeared first on Dinakaran.