×
Saravana Stores

கடல் சீற்றத்தால் கடலுக்குள் அடித்து சென்ற சவப்பெட்டிகள்


சாயல்குடி: சாயல்குடி அருகே ரோச்மா நகர் கடற்கரை கல்லறை தோட்டத்தில், கிறிஸ்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டாக கடல் சீற்றத்தால் மண் அரிமானம் ஏற்பட்டு எலும்புக் கூடுகள் வெளியே தெரிந்தது. மீனவர்கள் மற்றும் கிராம மக்களின் புகாரை தொடர்ந்து மாவட்ட அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடி, தொண்டி முதல் ஏர்வாடி, மூக்கையூர் கன்னிராஜபுரம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள கடல் பகுதியில் கடந்த சில வாரங்களாக காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ரோச்மா நகர் பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்படுவதாக மீனவர்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில், சில நாட்களாக உள்ள பெரும் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டது.

இதனால் கடற்கரையோரம் மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த மனித உடல்களின் மண்டை ஓடுகளும், எலும்புக்கூடுகள், சவப்பெட்டிகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. நேற்று காலையில் மூன்றுக்கும் மேற்பட்ட சவப்பெட்டிகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் உட்புகும் அபாயம் இருப்பதால், கிராம மக்கள் முன் வந்து ரூ.3 லட்சம் நிதியை சேர்த்து ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகளை தயார் செய்து, தற்காலிக கடல் அலை தடுப்புகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு உடனடியாக கடல் மண் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு மற்றும் கரையோரம் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முற்றுகையிட்ட மக்கள்
ரோச்மா நகர் கடற்கரைக்கு கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்ஆனந்த் மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட சென்றனர். அவர்களை, பெண்கள், மீனவர்கள் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தயவு செய்து எங்கள் கிராமத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தாங்கள் வரவேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

The post கடல் சீற்றத்தால் கடலுக்குள் அடித்து சென்ற சவப்பெட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Coffins ,CHAYALGUDI ,Rochma Nagar Beach Graveyard ,Christians ,Dinakaran ,
× RELATED சாயல்குடியில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்