கோவை, ஆக.22: கோவை திருப்பூர் ரயில் மார்க்கத்தில் பீளமேடு முக்கியமான வழியோர ரயில் நிலையமாக இருக்கிறது. அதிக இட வசதி, சரக்கு வாகனங்கள் நிறுத்தும் இடம் இருந்தும் இங்கே போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்டர் புதரில் மறைவாக அமைந்துள்ளது. இங்கே டிக்கெட் வாங்க பெண்கள், முதியோர் செல்ல அச்சப்படும் நிலைமை இருக்கிறது. ரயில் நிலைய நடை மேம்பாலத்தின் மீது போதை கும்பல் கஞ்சா, போதை ஊசியுடன் தினமும் படுத்து கிடக்கின்றனர்.
இந்த வழியாக பெண்கள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இரவு நேரத்தில் போதை கும்பல் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தங்கி விடுகின்றனர். இருகூர் ரயில் நிலையத்திலும் இதே நிலைமை தான். சரக்கு ரயில்கள் அதிகமாக நிறுத்தப்படும் இந்த ரயில் நிலையத்தை சுற்றியும் முட்புதர்கள் காணப்படுகிறது. பொதுமக்கள் ரயில் நிலையம் சென்று வர அச்சப்படும் நிலைமை இருக்கிறது. ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘ இருகூர், பீளமேடு ரயில் நிலையத்தில் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள் நின்று செல்கிறது. வடகோவை ரயில் நிலையத்தை விட இங்கே அதிக இட வசதி இருந்தும் முக்கிய சந்திப்பு பகுதியாக மாற்றவில்லை.
குடிநீர், கழிவறை வசதிகள் செய்யவில்லை. டிக்கெட் வழங்கும் இடத்தில் பாம்பு, தேள் நடமாட்டம் இருக்கிறது. டிக்கெட் வாங்க செல்பவர்கள் புதரில் இறங்கி செல்ல வேண்டியிருக்கிறது. ரயில் நிலையத்தில் போதுமான மின் விளக்கு அமைக்கப்படவில்லை. பெண்கள் தனியாக சென்றால் போதை கும்பல் கேலி கிண்டல் செய்கிறது. இந்த பகுதியில் ரயில்வே போலீசார் எட்டி கூட பார்ப்பதில்லை’’ என்றனர்.
The post இருகூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.