×

போலி பெண் டாக்டரிடம் சிகிக்சை பெற்ற பெண் உயிரிழப்பு அதிகாரிகள் விசாரணை குடியாத்தத்தில் பரபரப்பு

குடியாத்தம், ஆக.22: குடியாத்தத்தில் போலி பெண் டாக்டரிடம் சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் சுதந்திர வீதியை சேர்ந்தவர் சேதுபதி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியங்கா(36). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. எனவே, குடியாத்தம் வாரியார் நகரில், நர்சிங் மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு ஆங்கில முறை சிகிச்சை அளித்து வரும் பிரியா என்பவரிடம், நேற்று முன்தினம் இரவு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு பிரியங்காவை பரிசோதித்து ஊசி போட்டு, மருந்து மாத்திரைகள் கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டிற்கு வந்த பிரியங்கா நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கிளினிக் நடத்தி வரும் பிரியாவிடம் கேட்டபோது, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ₹5 லட்சம் பணம் கொடுத்து சரிகட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இதுகுறித்த தகவல் வாட்ஸ்அப் உட்பட சமூக வலைதளங்களில் வைரலாகி குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையறிந்த குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனை டாக்டர் பாபு, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் நேற்று சம்பந்தப்பட்ட கிளினிக்கிற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, அதிகாரிகள் வருவதை அறிந்து பிரியா தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அந்த கிளினிக்கில் இருந்த மருந்து மாத்திரைகள், ஊசிகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அரசு மருத்துவமனை டாக்டர் பாபு அளித்த புகாரின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, போலி டாக்டர் பிரியாவை வலைவீசி தேடிவருகின்றனர். போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்று பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

The post போலி பெண் டாக்டரிடம் சிகிக்சை பெற்ற பெண் உயிரிழப்பு அதிகாரிகள் விசாரணை குடியாத்தத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Gudiatham ,Sethupathi ,Kudiatham Swathi Road, Vellore district ,Priyanka ,
× RELATED புதிதாக கட்சி ஆரம்பித்து நிறைய பேர்...