×

சந்திரபாபு நாயுடு விதித்த தடையை அவரே நீக்கினார்; ஜெகன்மோகன் ரெட்டி சித்தப்பா கொலையில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி: அடுத்தடுத்து பலர் கைதாக வாய்ப்பு

திருமலை: ஆந்திராவில் சிபிஐ விசாரணைக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தான் விதித்திருந்த தடையை தற்போது சந்திரபாபு நாயுடுவே நீக்கியுள்ளார். இதன்மூலம் ஜெகன்மோகன் ரெட்டி சித்தப்பா கொலையில் பலரை சிபிஐ கைது செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஜனசேனா, பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தில் கடந்த 2014-2019ம் ஆட்சி காலத்தில் சிபிஐ விசாரணைக்கு சந்திரபாபு நாயுடு தடைவிதித்திருந்தார். பின்னர் வந்த ெஜகன்மோகன் ரெட்டி அரசும் அந்த தடையை தொடர்ந்தது.

இந்நிலையில் தற்போது சிபிஐ விசாரணைக்கு தெலுங்குதேசம் கட்சி கூட்டணி ஆட்சி அனுமதி வழங்கியுள்ளது. இதனை நேற்றுமுன்தினம் அரசிதழில் வெளியிட்டுள்ளது. அவற்றில் சில நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, மத்திய அரசு நிறுவனங்கள், ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள் மீது சிபிஐ நேரடி விசாரணை நடத்தலாம். ஆனால் ஆந்திர அரசு ஊழியர்களை விசாரிக்கும்போது மாநில அரசின் அனுமதி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கடந்த மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தனது முந்தைய ஆட்சியின்போது சந்திரபாபு நாயுடு சிபிஐ விசாரணைக்கு தடைவிதித்திருந்ததால் அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி அதனை தொடர்ந்தார். அப்போது அவரது சித்தப்பா விவேகானந்தரெட்டி கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் கடப்பா எம்.பி.அவினாஷ் ரெட்டியை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டது. ஆனால் இதற்கு ஜெகன்மோகன் ஒத்துழைப்பு அளிக்காததோடு முந்தைய சந்திரபாபு ஆட்சியின்போது விதித்த தடையை மேற்கொள்காட்டி சட்டம் ஒழுங்கு பாதிக்கும் எனக்கூறி நிராகரித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஆட்சி மாறியதோடு சிபிஐ விசாரணைக்கு ஆந்திர அரசு அனுமதி அளித்து அரசிதழில் வெளியிட்டுள்ளதால் ஜெகன்மோகனின் சித்தப்பா விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் மேலும் பலரை சிபிஐ அடுத்தடுத்து கைது செய்வதோடு இந்த வழக்கு சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஜெகன்மோகனுக்கு `டார்கெட்’?
கடந்த 2019ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் ெஜகன்மோகனின் சித்தப்பா விவேகானந்தரெட்டி கொல்லப்பட்டார். அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் சிபிஐ விசாரணை கோரினார். ஆனால் சிபிஐக்கு அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் அந்த வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் முடங்கி கிடந்தது. விவேகானந்தரெட்டி கொலையில் சிபிஐ விசாரித்தாலும் ஜெகன்மோகனின் நெருங்கிய உறவினரான அவினாஷ்ரெட்டியை விசாரிக்க முடியாமல் போனது. அண்மையில் நடந்த தேர்தலின்போது ஜெகன்மோகனின் தங்கையும் மாநில காங்கிரஸ் தலைவருமான ஷர்மிளா பிரசாரம் செய்தபோது சொந்த சித்தப்பாவை கொலை செய்த அவினாஷ்ரெட்டிக்கு தேர்தலில் மீண்டும் ஜெகன்மோகன் சீட் கொடுத்துள்ளார் என குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில் தற்போது புதிய அரசு பதவியேற்ற நிலையில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்திருப்பதால் ஜெகன்மோகனுக்கு சிக்கல் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post சந்திரபாபு நாயுடு விதித்த தடையை அவரே நீக்கினார்; ஜெகன்மோகன் ரெட்டி சித்தப்பா கொலையில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி: அடுத்தடுத்து பலர் கைதாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,CPI ,Jehanmohan Reddy Siddapah ,Thirumalai ,Andhra Pradesh ,Jehanmohan Reddy Siddapha ,Telugu Desam Party ,Jeganmohan Reddy Siddapah ,
× RELATED திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள்...