×
Saravana Stores

பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரத்தை விசாரிக்கும் போது அருணா ஷான்பாக்கின் பெயரை தலைமை நீதிபதி கூறியது ஏன்..? 1973ல் பெண் செவிலியருக்கு நேர்ந்த கொடுமையின் பின்னணி

புதுடெல்லி: பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரத்தை விசாரிக்கும் போது செவிலியர் அருணா ஷான்பாக்கின் பெயரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கூறினார். தற்போது அந்த பெண் செவிலியருக்கு நேர்ந்த கொடுமையின் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொல்கத்தா ெபண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூர சம்பவம் தொடர்பாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், ‘பெண்கள் அதிக எண்ணிக்கையில் பல்வேறு தளங்களில் பணியாற்றுவதால், அவர்கள் பாலியல் ரீதியான அபாயங்களை எதிர்கொள்கின்றனர். மருத்துவமனையின் உள்ளே மருத்துவ நிபுணர்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல்களில் அருணா ஷான்பாக் மீதான வன்முறையும் ஒன்றாகும். பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நடவடிக்கை எடுப்பது அவசியம். மற்றொரு பலாத்கார வழக்குக்காக இனியும் காத்திருக்க முடியாது. விஷயத்தின் தீவிரத்தை புரிந்துகொண்டு, தானாக முன்வந்து விசாரணை நடத்துகிறோம்’ என்றார்.

அருணா ஷான்பாக் என்பவரின் பெயரை தலைமை நீதிபதி குறிப்பிட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் ஹல்திபூரில் இருந்து மருத்துவ படிப்பு படிப்பதற்காக அருணா ஷான்பாக் மும்பை வந்தார். மும்பையில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றத் தொடங்கினார். அதே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கடந்த 1973ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி அருணா ஷான்பாக்கின் வாழ்க்கை முற்றிலும் மாறியது. அதே மருத்துவமனையில் பணிபுரியும் வார்டு உதவியாளர் ஒருவர், அருணா ஷான்பாக் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அவரை கடுமையாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார்.

பின்னர் அருணா ஷான்பாக்கை நாய் சங்கிலியால் கழுத்தை நெரிக்க முயன்றார். ஆனால் இந்த தாக்குதலில் அருணா ஷான்பாக்கின் உயிர் காப்பாற்றப்பட்டது. மூளையின் ஓடுகள் ஆழமாக பாதிக்கப்பட்டதால் அருணா ஷான்பாக் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, கடந்த 2015ம் ஆண்டில் இறக்கும் வரை கோமாவில் இருந்தார். இவ்வழக்கில் கைதான வார்டு உதவியாளருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது. அவரும் கடந்த 1980ம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே கடந்த 2011ம் ஆண்டு அருணா ஷான்பாக்கை கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் அருணா ஷான்பாக்கின் சார்பில் ஆஜரான பத்திரிக்கையாளர் விராணி, ‘அருணா ஷான்பாக்கால் வாழ முடியவில்லை. பெரும் இன்னல்களை அனுபவித்து வருகிறார். எனவே அவரை கண்ணியத்துடன் இறக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட் கருணைக்கொலைக்கு அனுமதி மறுத்துவிட்டது.

அதனால் நிமோனியா பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015ல் இவ்வுலகை விட்டு சென்றார் அருணா ஷான்பாக். எனவே அருணா ஷான்பாக்கிற்கு ஏற்பட்ட துயரத்தை மேற்கோள் காட்டி உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மிகவும் மனவேதனையில் கொல்கத்தா பெண் மருத்துவரின் பாலியல் பலாத்கார கொலை சம்பவத்தை நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரத்தை விசாரிக்கும் போது அருணா ஷான்பாக்கின் பெயரை தலைமை நீதிபதி கூறியது ஏன்..? 1973ல் பெண் செவிலியருக்கு நேர்ந்த கொடுமையின் பின்னணி appeared first on Dinakaran.

Tags : Chief Justice ,Aruna Shanbach ,NEW DELHI ,Supreme Court ,
× RELATED அவசர வழக்கு விசாரணை; வாய்மொழி கோரிக்கை...