சென்னை: ஆவின் பால் பண்ணைகளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதை உறுதி செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். ஆவின் பால்பண்ணையில் பணிபுரிந்தபோது இயந்திரத்தில் முடி சிக்கி உயிரிழந்த உமாராணி குடும்பத்துக்கு இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்த உமாராணி என்ற பெண் ஊழியர் கன்வேயர் பெல்டில் துணி, தலைமுடி சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். உயிரிழந்த உமாராணியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
பால் பண்ணையில் பணி செய்யும் ஊழியர்கள் ஆபத்தான இயந்திரங்களுக்கு இடையில் பணிபுரியும் போது, அவர்களுக்கான பாதுகாப்பை ஆவின் நிர்வாகம் உறுதி செய்திருக்க வேண்டும். உயிரிழந்த உமாராணியின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை வழங்குவதுடன், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் ஆவின் பால் பண்ணைகளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதை உறுதிசெய்யுமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
The post ஆவின் பால் பண்ணைகளில் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி தேவை: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை appeared first on Dinakaran.