×

கிருஷ்ணகிரி அணை பாசன கால்வாய்களை ₹98 கோடியில் புனரமைக்க திட்டம்

*அரசு பரிசீலனையில் இருப்பதாக சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவர் தகவல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை தூர்வாரவும், பாசன கால்வாய்கள் சீரமைக்கவும் ரூ.98 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சியில் விளையாட்டு மைதானம், மாரண்டப்பள்ளி வழியாக சிம்பில்திராடி வரை செல்லும் தார்சாலை சீரமைப்பு, சிம்பில்திராடி ஊராட்சியில் கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகட்டுமான பணி, பெரியமுத்தூர் கிருஷ்ணகிரி அணை இடதுபுற ஊற்று கால்வாயின் குறுக்கே சிறுசிறு நடை பாலங்கள், மதகுகள் அமைத்தல், திம்மாபுரம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி, காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட பன்னீர்செல்வம் தெருவில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயில் திருப்பணி, வெண்ணம்பள்ளி கிராமம் நத்தம் சர்வே ஆக்கிரமிப்பை அகற்றக்கேரிய மனு உள்ளிட்ட பல்வேறு மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

இதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுத் தலைவரும், அரசு தலைமை கொறடாவுமான திருவிடைமருதூர் தொகுதி எம்எல்ஏ கோவி.செழியன் தலைமையில், மாவட்ட கலெக்டர் சரயு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு முதன்மை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில், மனுக்கள் குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் பர்கூர் மதியழகன், அரியலூர் சின்னப்பா, செய்யாறு ஜோதி, செய்யூர் பாபு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு துணை செயலாளர் கணேஷ், சார்பு செயலாளர் சந்தானம் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்விற்கு பின்பு சட்டப்பேரவை மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இம்மாவட்டத்தில் பல்வேறு மனுதாரர்கள் வழங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சூளகிரியில் ரூ.44,040 மதிப்பில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சூளகிரியில் இருந்து கும்பளம் செல்லும் சாலை பிரிவில் இருந்து மாரண்டப்பள்ளி வழியாக சிம்பல்திராடி வரை செல்லும் தார்சாலையை, 3.76 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.2 கோடியே 74 லட்சம் மதிப்பில் அமைக்க அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.

கிருஷ்ணகிரி அணையில் உள்ள வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள், ஊற்று கால்வாய்கள் புனரமைக்கவும், அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை தூர்வாரிடவும், ரூ.98 கோடிக்கு, நீர்ப்பாசன நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு நிர்வாக ஒப்புதல் பெற வேண்டி பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, ஆர்டிஓ (பொ) கீதாராணி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மலர்விழி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ் குமார், ஊரக வளர்ச்சித்துறை ஒன்றிய பொறியாளர் கோவிந்தராஜ், தாசில்தார்கள் பொன்னாலா, சக்திவேல், திருமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கர், முருகன், சுப்ரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post கிருஷ்ணகிரி அணை பாசன கால்வாய்களை ₹98 கோடியில் புனரமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri Dam ,Leadership Petitions Committee ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணகிரி பள்ளியில் போலி என்.சி.சி...