×

கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் மக்கள் காத்திருப்பு போராட்டம்

கோவில்பட்டி : கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலை பகுதியில் இருப்புப்பாதை கடக்கும் இடத்தில் ரூ.13 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கப்படாததால், அப்பகுதியில் உள்ள ஜமீன்பேட்டை தெரு, பெரியார் தெரு, கோபால்செட்டி தெரு, நடராஜபுரம் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் வர முடியாமல் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

சுரங்கப்பாதையில் இருபுறமும் 5.5 மீட்டர் அளவில் அணுகுசாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. ஆனால் இப்பகுதியில் உள்ள கடைகளை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தை நாடியதால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத்துறை (நபார்டு), காவல் துறை மற்றும் வருவாய்த்துறை நெடுஞ்சாலைத்துறையினர் உயரதிகாரிகளின் உத்தரவுகளுடன் வந்திருந்தனர். அப்போது அதிகாரிகளுக்கும், வணிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அன்றைய தினம் 3 முறை மறியல் போராட்டங்கள் நடந்தன.

மாலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இளையரசனேந்தல் சாலையில் வணிக நிறுவனங்கள் ஆக.16ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து காலி செய்து விடுவதாக உயர்நீதி மன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்றுள்ளன. அதனால் 16ம் தேதிக்கு பின்னர் ஆக்கிரமிப்புகள் மற்றும் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

ஆனால், ஆக.20ம் தேதி ஆகியும் ஆக்கிரமிப்புகள், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெறாததால், இப்பகுதி மக்கள் 15வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் மணிமாலா தலைமையில் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 5ம் தூண் அமைப்பு நிறுவனர் சங்கரலிங்கம், மதிமுக நகர செயலாளர் பால்ராஜ் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஆக்கிரமிப்புகள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என மக்கள் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் நிஷாந்தினி, தலைமை எழுத்தாளர் அறிவழகன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அவர்கள் செப்.11ம் தேதி வரை உயர்நீதி மன்றத்தில் தடையாணை பெற்றுள்ளதால் தற்போது பணிகள் மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாலை 3 மணிக்கு அவர்கள் கலைந்து சென்றனர்.

The post கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் மக்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti RTO ,Kovilpatti ,Reserve Road ,Zameenpet Street ,Periyar Street ,Gopalsetty ,
× RELATED திரைத்துறையில் பாலியல்...