×

கணக்கர் பணியிடங்களுக்கு தேர்வான 537 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கருவூலக் கணக்குத் துறை தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பட்டுவாடா செய்தல், வரவு – செலவு விவரங்களை ஒப்பாய்வு செய்து கணக்குகளை மாநிலக் கணக்காயருக்கு ஒப்படைப்பு செய்தல், அரசின் வைப்பு கணக்குகளை கையாளுதல் மற்றும் முத்திரைத்தாள் விநியோகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கருவூலக் கணக்குத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, இதுநாள் வரை, கருவூலக் கணக்குத் துறையில் 16 கணக்கு அலுவலர், 118 இளநிலை உதவியாளர், 57 தட்டச்சர் மற்றும் ஒரு சுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 192 பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கணக்கர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 537 பேருக்கும், கருவூலக் கணக்குத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 10 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

புதிதாக நியமனம் பெற்றுள்ள பணியாளர்களுக்கு சிறப்பாக பணிபுரியும் பொருட்டு முழுமையான பயிற்சிகள் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், நிதித்துறை செயலர் (செலவினம்) நாகராஜன், கருவூலக் கணக்கு ஆணையர் கிருஷ்ணனுன்னி, கருவூலக் கணக்குத் துறை கூடுதல் இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கணக்கர் பணியிடங்களுக்கு தேர்வான 537 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Treasury Accounts Department ,Tamil Nadu government ,CM Stalin ,Dinakaran ,
× RELATED சென்னையில் எந்த மழை வந்தாலும்...