×

மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது கிரேன் அறுந்து விழுந்ததில் வட மாநில தொழிலாளி பலி

சென்னை: பூந்தமல்லியில் இருந்து கிண்டி வரையிலும், போரூரில் இருந்து வடபழனி வரையிலும் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் ஏராளமான வடமாநில தொழிலாளர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் பில்லருக்கு மேல் பகுதியில் பாலங்கள் அமைக்கப்பட்ட நிலையில் அதன் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேற்று மாலை ராட்சத கிரேன் உதவியுடன் பாலத்தின் மேல் பகுதியில் தடுப்புகள் அமைப்பதற்காக ராட்சத சிமென்ட் கான்கிரீட் சிலாப்பை கிரேன் உதவியுடன் மேலே ஏற்றிக்கொண்டிருந்தனர். அந்த சிலாப்பின் மீது பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர சிங் (27) என்ற தொழிலாளி நின்றபடி மேலே சென்று கொண்டிருந்தார். மெட்ரோ ரயில் பாலத்தின் மேலே சென்றபோது திடீரென கிரேனில் இருந்த இரும்புக் கம்பி அறுந்ததால் கான்கிரீட் சிலாப் கீழே விழுந்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தேவேந்திர சிங் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அங்கிருந்த சக தொழிலாளர்கள் தேவேந்திர சிங்கை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தேவேந்திர சிங் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் பணிகள் நடந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற பணிகளை மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் நடத்தாமல் மாலை நேரத்தில் நடத்துகின்றனர். சிலாப் மேலே இருந்து கீழே விழுந்தபோது அங்கிருந்தவர்கள் நாலா புறமும் சிதறி ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

The post மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது கிரேன் அறுந்து விழுந்ததில் வட மாநில தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : North ,CHENNAI ,Poontamalli ,Guindy ,Borur ,Vadapalani ,Nasarathpet ,Northern ,Dinakaran ,
× RELATED தண்டையார்பேட்டையில் வடசென்னை கிழக்கு...