×
Saravana Stores

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது: சத்தீஸ்கரில் சுற்றிவளைப்பு

ஆவடி: 2018ல் நடந்த கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை சத்தீஸ்கரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஆவடி அடுத்த பொத்தூர், வள்ளிவளவன் நகரில் கடந்த 2018ல், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்பிகாரி ரத்தே (48) என்பவர் தங்கி தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு, திலீப்குமார் பானர்ஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2018 அக்டோபர் 10ம் தேதி, மளிகைப் பொருட்கள் வாங்கியது தொடர்பாக, மது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால், ஆத்திரமடைந்த திலீப்குமார் பானர்ஜி, ராஜ்பிகாரி ரத்தேவை கல்லால் அடித்து கொலை செய்தார்.

தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் திலீப்குமார் பானர்ஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு தொடர்பான விசாரணை அம்பத்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆகாததால், பிணையில் வரமுடியாத வகையில் திலீப்குமாருக்கு பிடிவாரான்ட் பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகும் விசாரணைக்கு ஆஜராகாததால் தனிப்படை போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் சத்தீஸ்கரில் தலைமறைவாக இருந்த திலீப்குமார் பானர்ஜியை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது: சத்தீஸ்கரில் சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh Aavadi ,Chhattisgarh ,Rajbikari Rathe ,Pottur ,Aavadi ,
× RELATED ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது