டெல்லி: இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் இருந்த மோட்டோ கார்ப் நிறுவனத்தை மொத்த விற்பனையில் ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா பின்னுக்கு தள்ளி இருக்கிறது. இருப்பினும் சில்லறை விற்பனையில் ஹீரோ மோட்டர்ஸின் ஆதிக்கம் தொடர்கிறது. 2024 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை குறித்த தரவுகளை எஸ்.ஐ.ஏ.எம். எனப்படும் இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியாவில் முன்னணி நிறுவனமான ஹீரோ மோட்டாரை ஜப்பானின் ஹோண்டா பின்னுக்கு தள்ளியது. தரவுகளின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மொத்த விற்பனை மூலம் 18 லட்சம் 53 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. மொத்த உள்நாட்டு விற்பனையில் முன்னணியில் இருந்த ஹீரோ நிறுவனம் 18 லட்சத்து 31 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதாவது ஹீரோ நிறுவனத்தை விட ஹோண்டா 21,653 மோட்டார் சைக்கிள்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது.
இருசக்கர வாகன மொத்த விற்பனையில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டாலும் சில்லறை விற்பனையில் ஹீரோ மோட்டார் நிறுவனம் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. ஆட்டோ மொபைல் டீலர்கள் கூட்டமைப்பில் சில்லறை விற்பனை தரவுகளின் படி இதே காலகட்டத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் 17 லட்சத்து 50 ஆயிரம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் ஹோண்டா நிறுவனம் 15 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்றுள்ளது. சில்லறை விற்பனையில் ஹோண்டாவை விட இரண்டரை லட்சம் யூனிட்டுகளை ஹீரோ நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை: ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தை முந்தியது ஹோண்டா appeared first on Dinakaran.