×
Saravana Stores

ரூ.1.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் சி.வி.கணேசன்

சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள், பாடபுத்தகங்கள், வரைபடக்கருவிகள் மற்றும் கட்டணமில்லா பேருந்து அட்டை துவக்க நாளன்றே வழங்கி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பயிற்சியை துவக்கி வைத்தார். 2024-ம் ஆண்டில் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்துள்ள புதிய மாணவர்களுக்கான பயிற்சி துவக்க விழா தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் 19.08.2024 அன்று காலை 9.30 மணியளவில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அம்பத்தூரில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும். 306 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன.

தொழிற்சாலைக்கு தேவையான திறன் பெற்ற மனித வளத்தை தொடர்ந்துகிடைக்க செய்வதில் தொழிற்பயிற்சி நிலையங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இளைஞர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று நல்ல வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பிட்டர், எலக்ட்ரீசியன், மோட்டார் வெகிக்கிள் மெக்கானிக், ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர்கண்டிஷனிங் மெக்கானிக் போன்ற வேலை வாய்ப்புள்ள தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், பவர் எலக்ட்ரானிக்ஸ், ஸ்மார்ட் போன் ஆப்பரேட்டர்,பயர் டெக்னாலாஜி, அட்வான்ஸ்டு மெஷின் டூல் போன்ற நவீன தொழிற்பிரிவுகளிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது தவிர டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து மேனுபேக்ஸரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் அண்ட் ஆட்டோமேஷன், இண்டஸ்டிரியல் ரோபோடிக்ஸ் அண்ட் டிஜிட்டல் மேனுபேக்ஸரிங் டெக்னிசியன், அட்வாண்ஸ்டு சிஎன்சி மெஷினிங் டெக்னிசியன், பேசிக் டிசைனர் அண்ட் விருச்சுவல் வெரிபையர், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கிள் ஆகிய தொழிற்பிரிவுகளில் சென்ற ஆண்டு முதல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்தொழிற்பிரிவுகளில் சென்ற ஆண்டில் பயின்ற மாணவர்களில் 80% க்கு அதிகமானோர் பல முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 19.08.2024 அன்று பயிற்சி வகுப்புகள் துவங்குவதற்காக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அம்பத்தூரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தார்.

மேலும் புதிய மாணவர்களுக்கு துவக்க நாளன்றே விலையில்லா சீருடைகள், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா வரைப்படக்கருவிகள் மற்றும் கட்டணமில்லா பேருந்து சலுகை அட்டைகள் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். அரசு வழங்கும் இத்தகைய நலத்திட்ட உதவிகளை பயன்படுத்தி மாணவர்கள் மிகவும் கவனமாக பயிற்சிபெற்று நல்லவேலை வாய்ப்புகளை பெற்று வாழ்வில் வளம் பெறவேண்டும் என்று புதிய மாணவர்களை . அமைச்சர் வாழ்த்தினார்.

மேலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ள குறும்படத்தையும் அமைச்சர் வெளியிட்டார். அரசு தொழிற்பயிற்சி நிலையம் அம்பத்தூரில் ஹெச்சிஎல் பவுண்டேசன் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.1.25 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் கொ.வீரராகவராவ் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் எ.சுந்தரவல்லி மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

The post ரூ.1.25 கோடியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் சி.வி.கணேசன் appeared first on Dinakaran.

Tags : Minister ,CV Ganesan ,CHENNAI ,Labor Welfare and ,Skill ,Development ,Training ,Dinakaran ,
× RELATED கட்சிக்கு துரோகம் செய்வோரை ஒருபோதும்...