×

பழநி வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா…? பக்தர்கள் எதிர்பார்ப்பு

பழநி: பழநி வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பக்தர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக பழநி நகருக்கு அகல ரயில்பாதை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இவ்வழித்தடத்தில் பாலக்காடு, திருவனந்தபுரம், திருச்செந்தூர், மதுரை, சென்னை, கோவை ஆகிய ஊர்களுக்கு மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதில் பழநியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலும், திருச்செந்தூருக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயிலும் பாலக்காடு வரை நீட்டிப்பு செய்யப்பட்டு விட்டன. இதனால் பழநி கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த ரயில்களில் ஏறவே முடிவதில்லை. இந்த ரயில்களிலும் திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலிலும் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமென பக்தர்கள் மற்றும் பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை இந்த ரயில்களில் அதிகப்படுத்தவில்லை.

அதுபோல் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த போது பழநி வழித்தடத்தில் குருவாயூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய ஊர்களுக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை. இதுபோல் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு கரூர், சேலம் வழித்தடத்தில் மட்டுமே ரயில் இயக்கப்படுகிறது. திருச்சி வழித்தடத்தில் சென்னை எக்மோருக்கு ரயில் இயக்கப்படவில்லை. எனவே, இவ்வழித்தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட வேண்டுமென்றும், பழநி வழித்தடத்தில் திருப்பதி, கொச்சின் ஆகிய ஊர்களுக்கு தினசரி ரயில் இயக்கப்பட வேண்டுமென்றும் பக்தர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழநி வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா…? பக்தர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Palani ,Arupada ,Palani Dandayuthapani Swami Temple ,Tamil Nadu ,
× RELATED பழனியில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு ஐகோர்ட் கிளை அனுமதி..!!