×

மருத்துவ கழிவுகளின் கிடங்காக மாறிவரும் வைகை ஆறு: கலெக்டர் எச்சரிக்கையை தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரம்

மதுரை: வைகை ஆற்றில் கலக்கும் மருத்துவ கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதன்பேரில் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கையை தொடர்ந்து ஆற்றோரங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் நான்காவது பெரிய நதிகளில் ஒன்றான வைகை நதி, கடலில் கலக்காத ஒரே நதியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு மலைப்பகுதியில் இருந்து வரும் நீர் மற்றும் முல்லை பெரியாற்றின் உபரி நீர் ஒருங்கிணைந்து, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக 258 கி.மீ தென் தமிழகத்தில் பாய்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாயில் கலக்கிறது. ஆறு பயணிக்கும் திசையில் மதுரை மாவட்டம் மட்டுமே, பெரு நகரமாக வளர்ந்து வருகிறது.

மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆற்றை ஒட்டி உள்ள ஊராட்சிகளின் கழிவுநீர் கலக்கும் நிலையில், மாநகர் பகுதியில் 67 இடங்களில் கழிவுநீர் கலப்பது சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், பெரியளவில் நேரடியாக ஆற்றுக்குள் கழிவுநீர் கலக்கும், ஏழு இடங்கள் கண்டறியப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் அடைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 60 இடங்களில் கழிவுநீர் கலப்பது, இன்று வரை தொடர்கிறது. இச்சூழலில், மாநகரில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் விதமாக தலா, ரூ.10 கோடியில் ஆரப்பாளையம் அடுத்த ஓபுளாபடித்துறை, ஏ.வி பாலம் – கல்பாலம் இடையே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் குப்பை கொட்டி அவற்றை, மாசுபடுத்துவதும் சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்த நடவடிக்கை ஆற்றின் பாதுகாப்பில் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

* வைகை நதி மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘‘தேனியில் துவங்கும் ஆறு மூன்றாவதாக மதுரை மாவட்டத்திற்குள் நுழைகிறது. அதில், மாநகருக்குள் ஆறு பயணிக்கும் இடங்களில் மட்டும் தான், அதிகளவு குப்பை கழிவுகள் கலக்கிறது. அருள்தாஸ்புரம் பாலம் துவங்கி விரகனூர் முன்பு வரை தடுப்பணைகள் மற்றும் ஆற்றில் நீரோட்டம் செல்லும் பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. அதில், வண்டியூரை அடுத்த அண்ணா நகர் பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு மேல் பிளாஸ்டிக் பைகளும், அருள்தாஸ்புரம் பாலம் தடுப்பணை துவங்கி கல்பாலம் முன்பு வரையிலான பல இடங்களில் மருத்துவ கழிவுகளும், கட்டிட கழிவுகளும் நிறைந்து காணப்படுகின்றன. மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி தரப்பில் அடிக்கடி, பொக்லைன் இயந்திரம் வாயிலாகவும், நேரடியாகவும் ஆற்றில் இறங்கி குப்பைகளை அகற்றி வருகின்றனர். ஒரு புறம் குப்பைகளை அகற்றும் பணிகள் நடந்து வந்தாலும், மறுபுறம் அவற்றை கொட்டுவதும் தொடர்ந்து நடக்கிறது.
குறிப்பாக மாநகர எல்லைக்குள் ஆற்றில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள், தனியார் நிறுவனங்களிலிருந்து படித்துறைகள் மற்றும் சாலைகளின் மேல் நின்றபடியே குப்பையை, வீசுவதை காண முடிகிறது, இதை தடுக்கவும், ஆற்றினை பாதுகாக்கவும் ‘வைகை ஆற்றை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் வரும், டிசம்பர் முதல் ஜனவரி வரை மிகப்பெரும் பிரசாரம் நடத்த உள்ளோம்’’ என்றார்.

* நீர்நிலை ஆர்வலரான தெப்பக்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கூறுகையில்,‘‘வைகை ஆற்றில் குப்பை கழிவுகள் மற்றும் கழிவுநீர் விடுவதை தடுக்ககோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, நீதிமன்றம் தரப்பில் மாநகர் பகுதிக்குள் ஆறு பயணிக்கும் திசையில், ரோந்து காவலர்களை நியமித்து குப்பை கொட்டுவதை தடுக்கவும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் உத்தரவிட்டது. அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், தடுப்பணை மட்டுமின்றி ஆற்றின் நீரோட்டம் செல்லும் பகுதிகளிலும் மிகவும் அபாயகரமான கழிவுகளான மருத்துவ கழிவுகளான ஊசிகள், ரத்தம் தோய்ந்த பஞ்சுகள் மற்றும் காயங்களை குணப்படுத்தும் டியூப் மருந்துகளுடன், இதர குப்பைகளும் 5 அடி உயரம் வரை கொட்டப்பட்டுள்ளன.

இது தவிர, ஆற்றின் இருபகுதிகளிலும் கழிவுநீர் அகற்றும் லாரிகள், கழிவுநீரை மொத்தமாக ஆற்றுக்குள் விட்டு செல்வதால் அதிலுள்ள மண் முழுவதும் மலட்டுத் தன்மையடைந்து, நிலத்தடி நீரையும் விஷமாக்குகிறது. மேலும், ஆற்றில் குளிக்க செல்வோரும் மருத்துவ கழிவுகளால் காயமடைகின்றனர். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆற்றை தூய்மைபடுத்தும் பணி மாநகராட்சியால் நடந்து வந்தாலும், அப்போது கரையோரம் உள்ள குப்பைகளை மட்டும் அகற்றி, ஓரமாக எரித்து விடுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் தரப்பில், ஆற்றின் இருகரைகளிலும் குப்பை கொட்டுவதை தடுக்க, தூய்மை காவலர்களை நியமிக்கவும், ஆற்றின் கரைகளில் குப்பை தொட்டி வைப்பதுடன், குறிப்பிட்ட இடைவெளியில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கவும் முன்வர வேண்டும்,’’ என்றார்.

இதற்கிடையே மாவட்ட கலெக்டர் சங்கீதா, ‘ஆற்றுக்குள் குப்பைகள், கழிவுகள் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ கழிவுகள் கொட்டுவது பேராபத்தானது. இதனை செய்வோர் தண்டிக்கப்படுவர்’ என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘குப்பைகள், கழிவுகளை கொட்டுவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கழிவுகளை அகற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது’’ என்றனர்.

The post மருத்துவ கழிவுகளின் கிடங்காக மாறிவரும் வைகை ஆறு: கலெக்டர் எச்சரிக்கையை தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Vaigai river ,Madurai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மூல வைகை ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்