×
Saravana Stores

நெல்லை அருகே கோயில் கொடை விழாவில் பயங்கரம் அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை

* மற்றொரு சகோதரருக்கு தீவிர சிகிச்சை
* ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

திசையன்விளை: கோயில் கொடை விழா தகராறில் அண்ணன், தம்பி சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். இதில் படுகாயமடைந்த மற்றொரு சகோதரர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம், திசையன்விளை அப்புவிளை ஊராட்சிக்குட்பட்ட காரம்பாடு கிராமத்தில் ஓடைக்கரை சுடலை மாடசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை கொடை விழா நடக்கும்.

கக்கன் நகரை சேர்ந்த வரிதாரர்கள் கொடை விழாவை நடத்துவர். இவர்கள் இருதரப்பாக செயல்பட்டு வருவதால் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு கோயிலில் கொடை விழா நடந்தது. கோயிலின் ஒருபுறம் கிடா வெட்டி பெண்கள் பொங்கலிட்டு கொண்டிருந்தனர். மற்றொரு புறத்தில் கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதை இருதரப்பினரும் ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது சாமிக்கு பூஜை நடைபெற்றதால் கரகாட்ட நிகழ்ச்சி நிறுத்தப்படவே, இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆவேசமடைந்த ஒரு தரப்பை சேர்ந்தவர்கள், மற்றொரு தரப்பை சேர்ந்த முருகன் மகன்கள் மதிராஜன் (37), மதியழகன் (43), மகேஸ்வரன் (47) ஆகிய 3 பேரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே மதிராஜனும், மதியழகனும் உயிரிழந்தனர். கழுத்தில் பலத்த காயமடைந்த மகேஸ்வரனை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதனால் கோயில் கொடை விழா பாதியில் நின்றது. தகவலின் பேரில் நெல்லை எஸ்பி (பொறுப்பு) சுந்தரவதனம் வந்து விசாரணை நடத்தினார். இது குறித்து திசையன்விளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், ஒரே தெருவில் வசிக்கும் முருகன் குடும்பத்தினர் மற்றும் முருகேஸ்வரி குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சமீபத்தில் நடந்த நிலப்பிரச்னை காரணமாக ஏற்பட்ட மோதல் எதிரொலியாக கோயில் விழாவில் அண்ணன்- தம்பிகள் 3 பேரை மற்றொரு தரப்பினர் கத்தியால் குத்தியதும், இதில் இருவர் உயிரிழந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே கொலை தொடர்பாக இதே ஊரை சேர்ந்த முருகேஸ்வரி மகன்கள் விபின் (27), ராஜ்குமார் (28), வருண்குமார் (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். படுகொலையான மதிராஜனும், மதியழகனும் லாரி டிரைவர்களாக வேலை பார்த்தனர். மகேஸ்வரன், குலசேகரன்பட்டினம் பவர் பிளான்ட்டில் வேலை செய்து வருகிறார். இரட்டைக் கொலையால் திசையன்விளை அருகே காரம்பாடு கிராமத்தில் பதற்றம் நிலவுகிறது. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

The post நெல்லை அருகே கோயில் கொடை விழாவில் பயங்கரம் அண்ணன், தம்பி சரமாரி குத்திக்கொலை appeared first on Dinakaran.

Tags : Payangaram ,Nellai ,Vektaravilai ,Payangaram Annan ,
× RELATED ஐதராபாத்தில் அதிகாலை பயங்கரம்...