×

கல்யாண முருங்கையின் கல்யாண குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

வயல் வெளிகளிலும், சாலையோரப் பகுதிகளிலும் வேலி போன்று அமைந்து காணப்படும் ஒரு வகை கீரைதான் கல்யாணமுருங்கை கீரையாகும். இந்தக் கீரையை முள் முருங்கை, முள் முருக்கு, முருக்க மரம் மற்றும் கல்யாண முருக்கு என்ற பல பெயர்களில் அழைப்பதும் உண்டு.

இந்தக் கீரையில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் காரணமாக நமது முன்னோர்கள் தங்கள் வீட்டிற்கு மருமகள் வந்ததின் அடையாளமாக வீட்டு கொள்ளையில் ஒரு மரம் வைத்து வளர்ப்பார்கள். இதன் காரணமாகவே, இதற்கு கல்யாண முருங்கை என்ற பெயரும் வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வீட்டிற்கு வந்த பெண்ணிற்கு ஏதேனும் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால் இந்தக் கீரையை சமைத்து கொடுத்து சரி செய்துவிடலாம் என்ற எண்ணம்.

முள் முருங்கையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருந்தாலும், இது பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய வலி மற்றும் கருப்பை சார்ந்த அனைத்து பிரச்னைகளையும் தவிர்க்க உதவுகிறது. ஆகையால் இந்தக் கீரையை ஒரு மகளிர் மருத்துவர் என்ற புனைப்பெயரிலும் அழைக்கப்படுகிறது. முள்முருங்கையின் அறிவியல் பெயர்: எரித்தினியா வரியிகேட்டா.

இது பேபேசியே என்ற தாவரவியல் குடும்பத்தைச் சார்ந்தது. இக்கீரையின் இலை, பட்டை, பூ மற்றும் விதை என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் உடையது. இந்தக் கீரை சுமார் 70 அடி உயரம் வளரக்கூடியது.அகன்ற இலைகளை கொண்டது. தண்டுப்பகுதியில் முற்கள் காணப்படும். சிவப்பு நிற பூக்கள் கொத்தாக அமைந்து காணப்படும். பூக்கள் மனமற்றது. இத்தாவரம் இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படும்.

கல்யாண முருங்கையில் காணப்படும் சத்துகள்:

நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளிட்ட பல்வேறு தாதுக்களை கொண்டுள்ளது. மேலும் இக்கீரையில் எரித்ரைன், எரித்திரின் மற்றும் ஹைப்போபோரின் உள்ளிட்ட ஆல்கலாய்டுகளும், எரிவாரின் ஏ, பி மற்றும் சி உள்ளிட்ட டெரினாய்டுகளும் நிறைந்து காணப்படுவதினால் இக்கீரை பல்வேறு மருத்துவ பண்புகளுடன் திகழ்கிறது. மேலும் இதில் அதிக ஆன்டி ஆக்ஸின்டுகளும், சாப்போனின், பீனாலிக் மூலக்கூறுகளும் உள்ளன.

கல்யாண முருங்கையின் மருத்துவ குணங்கள்:

ஆல்கலாய்டுகள் இத்தாவரத்தில் செரிந்து காணப்படுவதால் இது ஒரு சிறந்த வலி நிவாரணியாக திகழ்கிறது.பீடுலினிக் அமிலம் கல்யாண முருங்கையில் கிடைக்கப்பெறுவதினால் இக்கீரையை புற்றுநோய் செல்களின் செயல்பாட்டினை தடுக்க பெரிதும் உதவுகிறது. பீனாலிக் அமிலம் செரிந்து இதில் உள்ளதால் இத்தாவரம் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்டுகளாக செயல்பட்டு உடல் செல்களின் செயல்பாட்டினை மேம்படுத்துகிறது.

கருப்பை சார்ந்த அனைத்து பிரச்னைகளையும் (மாதவிடாய் கோளாறு, கருப்பை கட்டி, நீர்க்கட்டி, குழந்தைப்பேற்றுக்கு பிறகு கருப்பையில் தங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற, வயிற்று வலி) சரி செய்ய உதவுகிறது. குடல் புழுக்களை அழிக்கவும் கல்யாண முருங்கை பயன்படுகிறது.சருமம் சார்ந்த பிரச்னைகள், மலச்சிக்கல், சுவாசக் கோளாறு போன்ற நோய்களுக்கும் ஒரு தீர்வாக கல்யாண முருங்கை விளங்குகிறது. ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படக்கூடிய உடல் பருமன், தைராய்டு, ஒழுங்கற்ற மாதவிடாய் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது.

சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்துவதிலும் கல்யாண முருங்கை உதவுகிறது. மேலும் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்கவும் பயன்படுகிறது. முள்முருங்கை மரம் வாந்தி, வயிற்று வலி, பித்தசுரம், அணல்வாய் வேக்காடு ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. இத்தகைய நன்மைகளை கொண்டுள்ள கல்யாண முருங்கை கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாகவோ, தோசை மாவில் கலந்து தோசையாகவோ, அடையாகவோ செய்து உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.

இலைகளை அரைத்து கிடைக்கும் சாற்றை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்பு பருகி வந்தால், கருத்தரித்தல் தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.கல்யாண முருங்கை இலையை வெங்காயம், தேங்காய், நெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.இலையை அரைத்து உடலில் பூசி உலர்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சரும நோய்கள் நீங்கும்.இந்தக் கீரையின் நன்மைகளை பதார்த்த குணப்பாட நூலில் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

முள்முருக்க மரத்தின் குணம் இது கல்யாணமுருக்கு
முள்ளு முருக்கதுதான் மோதுகின்ற சத்திகுன்மங்
கள்ளமறந் தீர்க்குங் கனற்சுரமும்- விள்ளரிய
அக்கரமும் போக்கு மனல்வாய் வேக்காடகற்று
மிக்கவலி கொடுக்கும் விள்.

The post கல்யாண முருங்கையின் கல்யாண குணங்கள்! appeared first on Dinakaran.

Tags : Kalyana Moringa ,Dr. ,Kungum ,R. Kalyanamurungai ,Sarmila ,
× RELATED உங்க லிகமென்ட் பேசுகிறேன்!