×

காசநோய் ஒரு கம்ப்ளீட் ரிப்போர்ட்!

நன்றி குங்குமம் டாக்டர்

காச நோய் என்பது ஆங்கிலத்தில் டி.பி (TUBERCULOSIS-T.B) என அழைக்கப்படுகிறது. இது மைக்ரோ பாக்டீரியம் டியூபர் குளோசிஸ் என்ற கிருமியினால் தொற்றக்கூடிய நோயாகும். காச நோய் உடலின் எந்த ஒரு பாகத்தையும் தாக்கலாம். குறிப்பாக, நுரையீரல், மூளை மற்றும் தண்டுவடத்தையே அதிகமாகத் தாக்குகிறது. பெரும்பாலானவர்களிடம் காசநோய் கிருமி உடலில் இருந்தாலும் அது நோயாக மாறுவதில்லை. ஹெச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் தொற்றக்கூடிய வாய்ப்பு மிக அதிகமாகும்.

எப்படிப் பரவுகிறது?

இது, மைகோபாக்டீரியம் டியூபர்குளோஸிஸ் எனப்படும் பாக்டீரியாவால் தோற்றுவிக்கப்படுகிறது. காசநோய் கண்ட நபரிலிருந்து காற்றின் மூலம் இந்நோய் மற்ற நபர்களுக்குப் பரவுகிறது.

அறிகுறிகள்

*விட்டு விட்டு காய்ச்சல்
*மூன்று வாரம் அல்லது அதற்கும் அதிகமான வாரங்கள் இடைவிடாத இருமல்
*சுவாசிப்பதில் பிரச்னை.

பரிசோதனைகள்

*சளி பரிசோதனை
*மார்பக எக்ஸ்ரே பரிசோதனை
*மான்டாக்ஸ் (MANTOUX) பரிசோதனை.
குழந்தைகளுக்கு காசநோய்

குழந்தைகளுக்கு காசநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கீழ்க்கண்ட சூழலில் வாழும் சில குழந்தைகளில், காசநோய் மற்றவர்களை விட அதிக அளவில் தொற்றக்கூடிய அபாயம் உண்டு.

– காசநோயின் தாக்கம் அதிகம் உள்ள நபர்கள் வசிக்கும் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு.

– எச்.ஐ.வி அல்லது மற்ற நோய் தடுப்பு தன்மையை குறைக்கும் நோய்தொற்று கொண்ட குழந்தைகள்.

– மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள சமூக சூழ்நிலையில் உள்ள குழந்தைகள்.

நுரையீரலுக்கு தொடர்பில்லாத காசநோய்

இதனை, ‘எக்ஸ்ட்ரா பல்மோனரி டியூபர்குளோசிஸ்‘ என்பார்கள். நுரையீரல் அல்லாத மற்ற பகுதிகளில் ஏற்படும் காசநோயினைக் குறிக்கிறது.

அறிகுறிகள்

நோய்த்தொற்று கொண்ட குறிப்பிட்ட பகுதி (நிணநீர்ச்சுரப்பிக் கணுக்கள் – லிம்ஸ்ப்நோட்ஸில் காசநோய்) வீக்கமடைதல், நடமாடும் திறன் குறைதல் (முதுகெலும்பு கூர்முனை-ஸ்பைனில் காசநோய்) அல்லது கடுமையான தலைவலி மற்றும் நரம்பு சம்பந்தமான குறைசெயல்பாடு (டி.பி. மெனிஞ்ஜைடிஸ்) போன்றவையாகும். எக்ஸ்ட்ரா பல்மோனரி டிபி-யில் இருமல் இருக்காது. ஏனெனில் இது நுரையீரலில் ஏற்படுவது இல்லை.

நோய் பரவும் முறை

முதன்மை நோய்த்தொற்றின் போது, இந்நோய் பரப்பும் பாக்டீரியா ரத்தம் மற்றும் நிணநீர் மண்டலம் மூலம் நுரையீரல் அல்லாத மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது. நோய் தொற்று கண்ட நபரின் உடலில், நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இருப்பின், இந்நோய்க்கிருமிகள் அழிக்கப்படுகின்றன. நோய்த்தொற்று கண்ட நபரின் உடலில், நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு இருப்பின், இவ்வகை பாக்டீரியா குறிப்பிட்ட பகுதிகளில் தங்கிவிடுகின்றன. இந்நோயினை தோற்றுவிப்பதற்கு முன்பு, சில மாதங்கள் முதல் வருடங்கள் வரை, தங்கள் இனப்பெருக்கத்தினை பாக்டீரியாக்கள் செய்து கொள்கின்றன.

இருமல் மூலம், நுரையீரலில் உள்ள பாக்டீரியாக்கள் சளி வழியாக வெளிவரும். அப்படி வரும் சளியினை விழுங்கும் போது, கழுத்துப்பகுதியில் உள்ள நிணநீர் நாளமுடிச்சுக்கள் மற்றும் வயிறு, குடல் போன்ற பகுதிகளுக்குள் பாக்டீரியாக்கள் செல்கின்றன.நோய் தொற்று கண்ட விலங்குகளின் பாலில் உள்ள மைக்கோபாக்டீரியம் போவிஸ் எனும் நோய் கிருமிகளால் பாலின் மூலம் இந்நோய் மனிதர்களுக்கு பரவுகிறது.

இந்நோய் தொற்று ஏற்படும் பொதுவான பகுதிகள்

நிணநீர் முடிச்சுகள் மற்றும் சீழுடன் உள்ள கட்டிகள் – குறிப்பாக கழுத்தை சுற்றியுள்ள பகுதிகள்.எலும்பு மற்றும் மூட்டுக்கள் – இப்பகுதி பாதிப்பு ஏற்பட்டால், நோயாளிகளில் பாதிப்பேருக்கு முதுகெலும்பு முற்பகுதி பாதிக்கப்படுகிறது. பெண்களில் கர்ப்பப் பை, ஆண்களில் விதைப்பையில் உள்ள எபிடிடைமிஸ் எனப்படும் இனப்பெருக்க உறுப்பு பகுதி பாதிக்கப்படுகிறது. இருபாரிலும், சிறுநீரகம், சிறுநீரகக்குழாய்கள் அல்லது சிறுநீர்ப்பை நோய் பாதிக்கிறது.

வயிறு, குடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பெரிடோனியம் எனப்படும் சவ்வுப்பகுதி பாதிக்கப்படலாம்.மூளை பகுதி (மெனிஞ்ஜைடிஸ்) – பாதிப்பு சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், விரைவில் மரணத்தைத் தோற்றுவிக்கும்.பெரிகார்டியம் (இதய உறை) – பாதிக்கப்படும் போது, இதயம் சுருக்கமடையச் செய்கிறது. தோல்- பாதிப்பு பல வடிவங்களில் ஏற்படும்.

காச நோய்க்கான சிகிச்சை என்ன?

காச நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தொடர்ந்து முழு சிகிச்சை காலத்துக்கும் எடுத்துக்கொண்டால் இந்த நோயை முழுமையாகக் குணமாக்கலாம். காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி, குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குத் தொடர்ச்சியாக மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். சில நோயாளிகளுக்கு மருந்துகளை ஒரு வருடத்துக்குகூட தொடர வேண்டிய நிலை வரலாம். மருத்துவரின் ஆலோசனைப்படிதான் மருந்துகளை நிறுத்த வேண்டும்.

நோயாளி தொடர்ந்து மருந்து உட்கொள்வதை மற்றவர் மேற்பார்வையிடும் ஒரு மருத்துவசிகிச்சை முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இது ஆங்கிலத்தில் டாட்ஸ் (DOTS) என்று அழைக்கப்படுகிறது. இந்த DOTS மருத்துவ சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.

தடுக்க… தவிர்க்க!

காச நோயாளி வாயை மூடாமல் இருமினாலோ அல்லது தும்மினாலோ அல்லது அங்கங்கு துப்பினாலோ,அவர்களின் எச்சில் மூலம் காச நோய் பரவுகிறது. அதனால் நோயாளிகள் இருமும்பொழுதும் அல்லது தும்மும்போதும் எப்போதும் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும்.நோயாளிகள் அங்கங்கு துப்பக்கூடாது மற்றும் இருமும்போது கைக்குள் ஸ்பிடூன் வைத்து கொள்ள வேண்டும். வீட்டிலும் நோயாளிகள் மூடி உள்ள தொட்டியில் தான் துப்பவேண்டும்.

காச நோயின் அறிகுறிகள் ஒருவருக்கு தோன்றினால், அதை கண்டு பயப்படாமல் இருப்பதும், நோயை மறைக்காமல் இருப்பதும் மிக முக்கியம். குறிப்பிட்ட நபர் தன்னை பரிசோதித்துக் கொள்வதும் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வதும் அவசியம்.

தவிர்க்க வேண்டியவை

காச நோயாளி, பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம் அல்லது மற்ற போதை தரக்கூடிய பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும். குளிர்ச்சியான பொருட்களைத் தவிர்த்தல் வேண்டும்.

செய்யவேண்டியவை

மூன்று வாரங்களோ அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இருமல் இருந்தால் சளி பரிசோதனை செய்யவேண்டும். இந்த பரிசோதனை இலவசமாக அரசு சளி நுண்ணுயிர் மையத்தில் செய்யப்படும்.

அனைத்து மருந்துகளையும் தொடர்ந்து முழுகால அளவுகளுக்கு எடுக்கவேண்டும்.டி.பி. குணப்படுத்தக்கூடியது என்பதை புரிந்து கொள்ளவும்.தும்மல் மற்றும் இருமல் ஏற்படும்பொழுது கைக்குட்டையை உபயோகப்படுத்தவும்.

செய்யக்கூடாதவை

மூன்று வாரங்களோ அல்லது அதற்கு மேலும் தொடர்ந்து இருமல் இருந்தால் மருத்துவ உதவியை தவிர்க்கக் கூடாது.டி.பி.-யை கண்டுபிடிக்க எக்ஸ்ரேயை மட்டும் சார்ந்து இருக்கக்கூடாது.மருத்துவர் அனுமதியில்லாமல் மருந்துகளை நிறுத்தக்கூடாது.டி.பி. நோயாளிகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது.கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது.

தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

The post காசநோய் ஒரு கம்ப்ளீட் ரிப்போர்ட்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பெரும் பூநாரை (Greater Flamingo)