×

கர்ப்பிணிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா?

நன்றி குங்குமம் டாக்டர்

கர்ப்பக்காலத்தில் பெண்கள் சாப்பிடக் கூடிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் என்று பட்டியல் இட்டு பின்பற்றப்படுகிறது. ஏனென்றால், கர்ப்பக்காலத்தில் உடல் நிலையில் மாற்றம், மனநிலை மாற்றம் உணர்ச்சிகளில் மாற்றம் ஏற்படும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் தங்களுடைய உணவு முறையில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

அதுபோன்று கர்ப்பக்காலத்தில் ஒவ்வாமையுள்ள உணவுகளை தவிர்ப்பதும் மிக முக்கியமாகும். ஏனெனில், ஓவ்வாமை உள்ள உணவுகள் கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும். அந்தவகையில், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா.. கூடாதா என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.கர்ப்பக்காலத்தில் வேர்க்கடலை உட்கொள்வது மிகவும் நல்லது. ஆனால் அந்த வேர்க்கடலையை அளவாகத் தான் உட்கொள்ள வேண்டும். முக்கியமாக உப்பு நிறைந்த வேர்க்கடலையை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வேர்க்கடலையை பச்சையாகச் சாப்பிடுவதை விட வேக வைத்த வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது. இதனால் உடலுக்கு பல்வேறு சத்துக்கள் கிடைக்கின்றன.

பொதுவாக வேர்க்கடலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எடுத்துக்கொள்ளலாம். இதனால், உடலுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கின்றன. உதாரணமாக, நீரிழிவுநோயைத் தடுக்கும். இதயத்தை பாதுகாக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும். கொழுப்பைக் குறைக்கும். இளமையை பராமரிக்கும். கருப்பைக் கோளாறுகளைச் சரிசெய்யும். பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை வேர்க்கடலை சீராக்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பகக்கட்டி உண்டாவதை தடுக்கிறது. அதிலும் கர்ப்பிணிப்பெண்கள் சாப்பிடும்போது இன்னும் அதிக பலன்கள் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.வேர்க்கடலையில் போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது.

புரதம் மற்றும் கலோரிகள்

100 கிராம் வேர்க்கடலை ஃபோலேட் தேவையை மட்டுமல்லாமல், புரதத் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இது தவிர, இதில் அதிக கலோரிகள் உள்ளன. இது ஆற்றலை அதிகரிக்கும். வேர்க்கடலையில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். கர்ப்பகால நீரிழிவு நோயை ஏற்படாமல் தடுக்கிறது.

பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பக்காலத்தில் உடல் எடை அதிகரித்து காணப்படும். வேர்க்கடலையை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, கெட்ட கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கிறது.

கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது

வேர்க்கடலை ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். ஆனால் அதை தினசரி அடிப்படையில் அளவாக உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நாளில் 100 கிராம் அளவு வேர்க்கடலையை எடுத்துக் கொள்ளலாம். இது 60 சதவீத ஃபோலேட் தேவையைக் கவனித்துக் கொள்வதாக கூறப்படுகிறது. பொதுவாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஃபோலேட் அளவு மிகவும் முக்கியமாகும்.

இது முதல் சில மாதங்களில் கருவின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் வேர்க்கடலையில் புரதம் அதிகம் உள்ளதால் கர்ப்பகாலத்தில் வளரும் சிசுவிற்கு மூளை மற்றும் முதுகெலும்புகளில் ஃபோலேட் மற்றும் ஃபோலிக் அமில சப்ளிமெண்ட்ஸ் பரிந்துரைக்கப்படுகின்றன. வேர்க்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிகவும் அவசியமாகிறது.

வேர்க்கடலையில் வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. இவை பிறப்புக் குறைபாடுகளை தடுக்கின்றன. கருவின் மூளையின் வளர்ச்சிக்கு ஃபோலலேட் மிகச் சிறந்ததாகும். எனவே, வேர்க்கடலை கர்ப்பக்காலத்தில் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

மனச்சோர்வு தடுக்கிறது

கர்ப்பம் தரிப்பது என்பது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும், அது சில சமயங்களில் சில பெண்களுக்கு மன அழுத்தமாகவும் இருக்கலாம். எனவே, மனச்சோர்வை தடுக்க, உணவில் வேர்க்கடலையைச் சேர்த்து சாப்பிட்டால் மனச்சோர்வு குறையும். சைவஉணவு உண்பவர்களும், மீன் சாப்பிட விரும்பாத கர்ப்பிணிப் பெண்களும் வேர்க்கடலையை மாற்றாக பயன்படுத்தலாம். இதில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.

ஒவ்வாமை பிரச்னை

கர்ப்பக்காலத்தில் வேர்க்கடலை அல்லது எந்த உணவிற்கும் ஒவ்வாமை இருந்தால் அவற்றை எல்லா நேரங்களிலும் தவிர்க்க வேண்டும். அதுபோன்று சாக்லேட், தானியங்கள், இனிப்புகள் போன்ற வேர்க்கடலை சேர்த்த உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

வேர்க்கடலை மிகவும் ஆரோக்கியமான சிற்றூண்டியாகும். இருந்தாலும் வேர்க்கடலை வறுத்து உண்பதைக் காட்டிலும் வேகவைத்து உண்பது நல்ல பலன்களை தரும். எனவே, உப்பு வேர்க்கடலை, சர்க்கரை கலந்த வேர்க்கடலை மற்றும் பொரித்த வேர்க்கடலைகளை கர்ப்பக்காலத்தில் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

தொகுப்பு: ரிஷி

The post கர்ப்பிணிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா? appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தனுசு ராசிப் பெண் கண்ணியமும் கட்டுப்பாடும்!