ஜெனீவா : கொரோனாவைத் தொடர்ந்து மனித குலத்தை அச்சுறுத்தும் குரங்கு அம்மை புதிய வகை திரிபு வைரஸ் ஆப்ரிக்காவை தாண்டி சுவீடனுக்கு பரவி இருப்பதால் அச்சம் அதிகரித்துள்ளது. ஆப்ரிக்காவில் வேகமாக பரவும் தன்மை கொண்ட குரங்கு அம்மை வைரஸில் புதிய வகை திரிபு பரவி வருகிறது. பெரு, காங்கோ உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய வகை குரங்கு அம்மை பாதிப்பை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த சூழலில் ஆப்ரிக்காவிற்கு வெளியே முதல் நபராக குரங்கு அம்மை புதிய திரிபு வைரசால், சுவீடனில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஆப்ரிக்காவில் இருந்து சுவீடன் வந்த போது, நோய் தொற்று கண்டறியப்பட்டதாகவும் அவரை சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி, முழு கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவில் தற்போது பரவும் புதிய வகை திரிபு வேகமாக பரவும் தன்மை கொண்டதால் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஆப்ரிக்காவில் இந்த ஆண்டு குரங்கு அம்மை நோயால் இதுவரை 14,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் 524 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் காங்கோவில் கண்டறியப்பட்ட இந்த திரிபு, அங்கிருந்து கென்யா, ரூவாண்டா, உகாண்டா, பெரு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு பரவி உள்ளது. குரங்கு அம்மை வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டதாகும். காய்ச்சல், உடல்வலி, முதுகு வலி, உடல் நடுக்கம் ஏற்பட்டு, அடுத்த 5 நாட்களில் உடலில் சிவப்பு நிற கொப்புளங்களாக மாறுவது அதன் அறிகுறிகளாகும்.
The post ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மை பாதிப்பால் 524 பேர் உயிரிழப்பு: சுகாதார அவசர நிலையாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு appeared first on Dinakaran.