×

காசாவில் மனிதாபிமான உதவியை அதிகரிக்கும்; அமெரிக்காவின் நிபந்தனைகளை நிறைவேற்ற தவறியது இஸ்ரேல்: ராணுவ ஆதரவை நிறுத்துவாரா அதிபர் பைடன்?

ஜெருசலேம்: வடக்கு காசாவில் ஹமாஸ் போராளிகள் மீண்டும் ஒருங்கிணைந்துள்ளதாக கடந்த மாதம் குற்றம்சாட்டிய இஸ்ரேல் அப்பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதனால் காசாவில் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து, கடந்த மாதம் 13ம் தேதி இஸ்ரேலுக்கு 19 நிபந்தனைகளை அமெரிக்கா விதித்தது. ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 350 லாரிகளில் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும், வடக்கு காசாவிற்கு உதவி குழுக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும், பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா அமைப்பின் செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை ஒரு மாதத்தில் செய்து முடிக்க வேண்டுமெனவும், இந்த காலக்கெடுவை மீறினால், ராணுவ ஆதரவை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என பைடன் நிர்வாகம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், இந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இஸ்ரேல் பெரும்பாலான நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என 8 சர்வதேச உதவி அமைப்புகள் கூட்டாக குற்றம்சாட்டி உள்ளன. 15 நிபந்தனைகளை துளி கூட நிறைவேற்றாத இஸ்ரேல், 4 நிபந்தனைகளை மட்டுமே ஓரளவுக்கு செய்துள்ளது.

அதிலும், முந்தைய மாதத்தை விட நிலைமை இன்னும் மோசமாகி இருப்பதாகவும் குறிப்பாக வடக்கு காசாவில் மக்களின் நிலைமை படுமோசமாகி இருப்பதாகவும் சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. இதனால், பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கு அளிக்கும் ராணுவ ஆதரவை திரும்பப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அதிபர் தேர்தலில் மீண்டும் டிரம்ப் வென்றுள்ளதால் பைடன் நிர்வாகத்திற்கு தற்போது ஓரளவுக்கான அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. இதை வைத்து அவர் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது சந்தேகமே என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

40% உதவிகளை திருடும் ஹமாஸ்
காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை நிர்வகித்து வரும் இஸ்ரேல் ராணுவத்தின் ‘கோகாட்’ அமைப்பு, அக்டோபரில் சராசரியாக ஒருநாளைக்கு 57 டிரக்குகள் காசாவில் நுழைந்ததாக கூறி உள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையை விட உண்மையில் கிடைத்தது குறைவு எனவும் அக்டோபரில் சராசரியாக ஒருநாளைக்கு 37 டிரக் உதவிப் பொருட்கள் மட்டுமே வந்ததாக ஐநா கூறி உள்ளது. இஸ்ரேல் ராணுவ அதிகாரி கூறுகையில், ‘‘ 40 சதவீத உதவிப் பொருட்களை ஹமாசும், அவர்களுடன் தொடர்புடைய குடும்பங்களும் திருடிச் செல்கின்றன’’ என்றார்.

31 பாலஸ்தீனர்கள் பலி
காசாவின் முவாசி, நஸ்ரேத் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உட்பட 31 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் முவாசியில் இஸ்ரேலால் மனிதாபிமான மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் குண்டு வீசப்பட்டுள்ளது. நஸ்ரேத்தில் நிவாரண முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டிரம்ப் அதிபரானதும் மேற்குகரை இணைப்பு
இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசாலெல் ஸ்டோரிச் அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, மேற்குக்கரை இஸ்ரேலுடன் இணைக்கப்படும்’’ என்றார். பாலஸ்தீன பிராந்தியமான மேற்கு கரை கடந்த 1967ம் ஆண்டிலிருந்து இஸ்ரேலின் ராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. இங்கு பல்வேறு குடியிருப்புகளை இஸ்ரேல் நிறுவியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு, சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

The post காசாவில் மனிதாபிமான உதவியை அதிகரிக்கும்; அமெரிக்காவின் நிபந்தனைகளை நிறைவேற்ற தவறியது இஸ்ரேல்: ராணுவ ஆதரவை நிறுத்துவாரா அதிபர் பைடன்? appeared first on Dinakaran.

Tags : Gaza ,Israel ,President Biden ,JERUSALEM ,Hamas ,northern Gaza ,United States ,US ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம்; இந்தியா ஆதரவு