×
Saravana Stores

பாஜ அரசு வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் பிரிவினைவாத சிந்தனையை ஊக்குவிக்கிறது: காங். தலைவர் கார்கே காட்டம்

புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசு வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் பிரிவினைவாத சிந்தனையை ஊக்குவிப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கடுமையாக சாடி உள்ளார். 78வது சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கார்கே ஆற்றிய உரையில், “சுதந்திர போராட்டத்தில் சாதி, மதம், இன பாகுபாடுகளை கடந்து அனைவரும் பங்கேற்று பல்வேறு தியாகங்களை செய்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.

வீடுகளை விட்டு வௌியேறினர். வசதி படைத்தவர்கள் கூட சுதந்திரத்துக்காக சிறையில் வாடினர். பல ஆண்டு போராட்டங்கள், தியாகங்களுக்கு பிறகு நாட்டின் அடிமைச்சங்கிலிகள் உடைக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் பெற்றது. சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவருக்கும் நாம் தலைவணங்குகிறோம். ஆனால் இங்கே சிலர் எளிதாக சுதந்திரம் பெற்று விட்டது போல் பிரசாரம செய்கிறார்கள். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் இப்போது காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை சொல்கிறார்கள். சுதந்திர போராட்டத்தில் எந்த பங்களிப்பும் இல்லாதவர்கள் தியாகிகளின் பட்டியலில் இடம்பெற விரும்புகின்றனர்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே சுதந்திர போராட்ட தியாகிகள் நமக்கு காட்டிய பலம். அது பலவீனம் அல்ல. அவர்கள் காட்டிய வழியில் நடக்காமல் இன்றைய ஆட்சியாளர்கள் வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் பிரிவினைவாத சிந்தனையை ஊக்குவிக்கிறார்கள். நாட்டை பிரிப்பதில் பிறந்ததே அவர்களின் வெறுப்பு நிறைந்த அரசியல் என்பதே வரலாற்று உண்மை. அவர்களால்தான் பிரிவினை ஏற்பட்டது. சங்பரிவார்கள் சொந்த நலனுக்காக ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கையை கையிலெடுத்தது.

அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றுவதை தவிர்த்து வந்தவர்கள் இப்போது வீடு தோறும் தேசிய கொடி என்று முழுங்குகின்றனர். அவர்களின் 60 ஆண்டுகால தவறுக்கு இப்போது வருந்துவது மகிழ்ச்சி” என்று காட்டமாக தெரிவித்தார்.

The post பாஜ அரசு வெறுப்பை பரப்பும் நோக்கத்துடன் பிரிவினைவாத சிந்தனையை ஊக்குவிக்கிறது: காங். தலைவர் கார்கே காட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kharke Kattam ,New Delhi ,Congress ,Kharge ,Union BJP government ,78th Independence Day ,president ,Mallikarjuna Kharge ,BJP government ,Karke Kattam ,
× RELATED விலை உயர்வால் ஏழைகளின் தட்டுக்களில்...