×
Saravana Stores

பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் பைக்குடன் விழுந்து வாலிபர் பலி: திட்ட அலுவலர் அதிரடி கைது

குத்தாலம்: பாலம் கட்டுதவற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் விழுந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து திட்ட அலுவலர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கே சிறு பாலங்கள் இடித்து அகற்றப்பட்டு புதிய பாலங்கள் கட்டும் பணி நடக்கிறது. அதன்படி மயிலாடுதுறை அடுத்த எலந்தங்குடியில் சிறுபாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது.

இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை போதிய தடுப்புகளை வைத்து அடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் குத்தாலம் அடுத்த வழுவூரை சேர்ந்த எலக்ட்ரீசியன் மணிகண்டன் (25), மயிலாடுதுறையில் இருந்து வழுவூருக்கு பைக்கில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு சென்றபோது எலந்தங்குடியில் சிறுபாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தடுமாறி பைக்குடன் விழுந்தார். இதில் பாலம் கட்டுமானத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பியில் மணிகண்டனின் தலை குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து பெரம்பூர் போலீசார் சென்று மணிகண்டன் உடலை அப்புறப்படுத்த முயன்றனர். இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள், போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாதவர்களை கைது செய்யும் வரை உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று அதிகாலை 2 மணி வரை நீடித்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்பின் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பின்னர் போலீசார், மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திட்ட அலுவலர் நாகராஜ், ஒப்பந்ததாரர் கண்ணன், மேலாளர் சரவணன், பணி மேற்பார்வையாளர்கள் செரீப், ஆசை தம்பி ஆகியோர் மீது பெரம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திட்ட அலுவலர் நாகராஜ் (52) கைது செய்யப்பட்டார்.

The post பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் பைக்குடன் விழுந்து வாலிபர் பலி: திட்ட அலுவலர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Kutthalam ,Mayiladuthurai ,Thiruvarur ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில்...