×

விஷால் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஃபிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முன்னனி தமிழ் சினிமா ஹீரோக்களில் விஷாலும் ஒருவர். சமீபத்தில் இவரது நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கிய ரத்னம் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதையடுத்து, மதகஜராஜா, கருப்பு ராஜா வெள்ளை ரோஜா, துப்பறிவாளன் 2, நாளை நமதே போன்ற படங்களின் வெளியீடுகளுக்காகக் காத்திருக்கிறார். விஷால் தனது ஃபிட்னஸ் குறித்து பகிர்ந்து கொண்டவை:

ஒர்க்கவுட்ஸ்: நடிகனாக இருப்பதால், ஒவ்வொரு இயக்குநர் ஒரு ஒரு விதமாக கேட்பார்கள். அதற்கேற்றாற்போல் அவ்வப்போது உடலமைப்பை மாற்ற வேண்டும். சிஜியில் பார்த்து கொள்ளலாம் என்று இருக்காமல், அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு மாற்றிக் கொள்வேன். சமீபத்தில் வெளியான ரத்னம் படம் கூட அப்படிதான். 14 வருடங்களுக்கு முன்னாடி இருந்த சண்டகோழி படத்தில் இருந்த விஷால் வேண்டும் என இயக்குநர் ஹரி சொன்னார். சரி பண்ணிடலாம் என சொன்னேன். எத்தனை மாசம் வேண்டும் என கேட்டார். நான் 3 அல்லது 4 வாரங்கள் கொடுங்கள் என சொன்னேன். எனக்கும் என்னை மீண்டும் அப்படி பார்க்க ஒரு ஆர்வம் வந்துவிட்டது.

அதற்காக 26 நாட்கள் கடுமையாக உழைத்து அந்த உடலமைப்பை மீண்டும் கொண்டு வந்தேன். இப்போது அந்த ரொட்டீன் எனக்கு பிடித்துவிட்டது. அது உடலுக்கும், மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை தருகிறது. அதனால், இப்போது அதையே ஃபாலோ பண்ண ஆரம்பித்துவிட்டேன். இப்படி இயக்குநர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அந்த கதாபாத்திரத்துக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்வேன்.

மற்றபடி எனது தினசரி ஓர்க்கவுட் என்றால், காலை 4.30 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். 5-7 வரை சைக்கிளிங், ஜாகிங், வாக்கிங் என ஏதாவது ஒரு பயிற்சியை என் டிரைனர் வினோத் கொடுத்துவிடுவார். இது தவிர மற்ற ரெகுலர் பயிற்சிகள் இருக்கும். மேலும், தற்காப்புக் கலைகள் மற்றும் பூட் கேம்ப் பயிற்சிகளையும் செய்வேன். இது தவிர, கிரிக்கெட் மற்றும் பேட்மிண்டன் விளையாடுவேன். வாரத்திற்கு மூன்று முறையாவது தவறாமல் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவேன்.

ஹரி சார் சூட்டிங்கில் இருந்தவரை, அவர் 7 மணிக்கெல்லாம் சூட்டிங் ஆரம்பித்துவிடுவார். அதனால், காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து மற்ற வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, நான் ரெடியாகி சூட்டிங் ஸ்பாட் எவ்வளவு தூரமானாலும் சைக்கிளிலேயே சென்றுவிடுவேன். இவ்வளவு தூரம் சைக்கிளில் வரீங்களே கஷ்டமாக இல்லையா என்று பலரும் கேட்பார்கள். சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதற்காகவே, எனது வண்டி எல்லாவற்றையும் விற்றுவிட்டேன். அதனால், எங்கு செல்ல வேண்டும் என்றாலும் சைக்கிள்தான். அது உடற்பயிற்சிக்கும் பயன்படுகிறது. எனது மென்ட்டல் ஹெல்த்துக்கும் பயன்படுகிறது.

அதுபோன்று, இரவு 9 மணிக்கெல்லாம் போன்னை ஆப் செய்துவிட்டு தூங்க சென்றுவிடுவேன். 10 மணிக்கெல்லாம் தூங்கி விடுவேன். காலை 3 மணிக்கு எழுந்தாலும் சரி, நாலு மணிக்கு எழுந்தாலும் சரி என் டிரைனருக்கு போன் செய்து அவரை வரவழைத்துக் கொண்டு வாக்கிங் செல்ல ஆரம்பித்து விடுவேன்.

பொதுவாக, நாம் எல்லாவற்றுக்கும் ஒரு நேரத்தை ஒதுக்குவோம். ஆனால், நமக்காக, நமது உடலின் ஆரோக்கியத்துக்காக மட்டும் நேரத்தை ஒதுக்க மாட்டோம். அதுதான், உடலில் பல்வேறு சிக்கல்களை நாளடைவில் ஏற்படுத்துகிறது. அதனால் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 45 நிமிடமாவது உங்களுக்காக ஒதுக்குங்கள். உங்களால் முடிந்த சின்ன சின்ன உடற்பயிற்சிகளையாவது செய்யுங்கள். ஏனென்றால் நமது உடம்புதான் நமக்கான கோவில். அதனை சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

டயட்: ஆரோக்கியம் எனும்போது, டயட் 60 சதவீதம் உடற்பயிற்சி 40 சதவீதம் இரண்டும் சரியாக இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். எனவே, என் டிரைனர், எனது டயட்டிஷியன் சொல்லும் உணவுகளைதான் தினமும் ஃபலோ செய்கிறேன். அந்தவகையில், மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறைதான் நான் அரிசி சோறு சாப்பிடுகிறேன். இட்லி, தோசை சாப்பிடுவதில்லை. மற்றபடி எனது டயட்டில் இலை, தழைகளே அதிகம் இருக்கும். இந்த டயட்டில் என் அம்மாவுக்கு கோபம் வந்து பலமுறை என் டிரைனரிடம் சண்டைக்கு போய்விடுவார். பிறகு அவரை சமாதனப்படுத்துவேன். மற்றபடி எனக்கு எல்லா உணவுகளுமே பிடிக்கும். கடல் உணவுகள் விரும்பி சாப்பிடுவேன். அதிலும், அம்மா சமைக்கும் மீன், இறால் எல்லாம் ஆல்டிமெட்டாக இருக்கும்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post விஷால் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்! appeared first on Dinakaran.

Tags : Dr ,Vishu ,Hari ,
× RELATED விஷமாகும் உணவுகள்… உஷார் ப்ளீஸ்!