×

அரூரை நகராட்சியாக தரம் உயர்த்தும் பணிகள் மும்முரம்

தர்மபுரி, ஆக.14: ஊராட்சிகளை இணைத்து அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதையடுத்து அலுவலக ரீதியான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தர்மபுரியில் இருந்து 40 கி.மீ., தொலைவில் அரூர் உள்ளது. ஊராட்சியாக இருந்த அரூர், கடந்த 1945ம் ஆண்டு பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1955ம் ஆண்டு 2ம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1960 மே 23ம் தேதி முதல்நிலை பேரூராட்சியாகவும், 1969 செப்டம்பர் 17ம் தேதி தேர்வுநிலை பேரூராட்சியாகவும், 2023 ஏப்ரல் 15ம் தேதி சிறப்புநிலை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தலைவராக இந்திராணி, துணைத்தலைவராக சூர்யா தனபால் மற்றும் 16 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.

அரூர் பேரூராட்சி 14.75 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டதாகும். மக்கள் தொகை 32 ஆயிரம் பேர் உள்ளனர். தினசரி அரூருக்கு 10 ஆயிரம் பேர் பல்வேறு அலுவல்களுக்காக வந்து செல்கின்றனர். அரூர் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து அனைத்து ஊர்களுக்கும் பஸ் வசதி உள்ளது. தேசிய வங்கிகள், அரசு பள்ளி, கல்லூரிகள் உள்ளன. அரூர் பேரூராட்சிக்கு கடை வாடகை, வரியினதாக ஆண்டுக்கு ₹7.50 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. பேரூராட்சியில் 43 தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் 22பேர் என மொத்தம் 100 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த பேரூராட்சியில் தினசரி 7 டன் குப்பைகள் சேகரிப்படுகிறது.

அரூர் சுற்றுவட்டார மலைக்கிராமங்களான சித்தேரி, சிட்லிங், ஏகே.தண்டா, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, தீர்த்தமலை உள்ளிட்ட நூற்றுகணக்கான கிராமங்களிலிருந்து மக்கள் தினசரி அரூர் கடைவீதிக்கு நேரில் வந்து வீட்டுக்கு, விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி செல்கின்றனர். அரூரில் இருந்து சென்னை, பெங்களூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு நேரடியாக பஸ்வசதி உள்ளது. இதனால் எப்போதும் அரூர் நகர பகுதி பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூருக்கு வந்த தமிழக முதல்வர், அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். அப்போது, அரூர் அருகேயுள்ள மோபிரிபட்டி, -தொட்டம்பட்டி ஊராட்சிகளை இணைத்து, அரூர் பேரூராட்சியை \\\\”அரூர் நகராட்சியாக” தரம் உயர்த்தப்படும் என்றார். இதையடுத்து நகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் மும்முரமாக அலுவலகரீதியாக நடந்து வருகிறது. விரைவில் நகராட்சியாக அரூர் பேரூராட்சி இயங்கும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அரூர் மோபிரிபட்டி, -தொட்டம்பட்டி ஊராட்சியை இணைத்து ‘அரூர் பேரூராட்சியை நகராட்சியாக’ தரம் உயர்த்தப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அலுவலக ரீதியான பணிகள் மும்முரமாக நடக்கிறது. தற்போது அரூர் பேரூராட்சி 14.75 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 113 தெருக்கள் உள்ளன. மோபிரிபட்டி, -தொட்டம்பட்டி ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக மாறியபின்னர், அரூர் நகராட்சி 21.69 சதுர கிலோ மீட்டர் பரப்பளவாக கொண்டதாக இருக்கும். மக்கள் தொகை 32 ஆயிரத்தில் இருந்து 48 ஆயிரமாக உயரும். வார்டு 18ல் இருந்து 30 வார்டாக மாறும். நகர மக்களுக்கு மேலும் அடிப்படை வசதிகள் கிடைக்கும். சிங்கார நகரமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு கூறினர். அரூர் பேரூராட்சி பகுதியில் மக்கள் தொகை பெருக்கத்தாலும், தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதாலும், அரூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது என அதிகாரிகள் வட்டார்த்தில்
தெரிவிக்கப்பட்டது.

The post அரூரை நகராட்சியாக தரம் உயர்த்தும் பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Arur ,Dharmapuri ,Chief Minister ,Tamil ,Nadu ,Arur Municipality ,Aroor ,
× RELATED அரூர் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம்