×

நிதிநிலை அறிக்கையின்படி வருவாய்த்துறை, கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை செயல்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார் மேயர் பிரியா..!!

சென்னை: நிதிநிலை அறிக்கையின்படி வருவாய்த்துறை, கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செயல்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறையில் வழங்கப்படும் புதிய/மறுமதிப்பீடு, சொத்துவரி மதிப்பீடு, சொத்துவரி பெயர் மாற்றம், தொழில் உரிமம் அறிவிப்பு ஆகிய ஆணைகளின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கான விரைவுத் தகவல் குடியீட்டினையும் (QR Code), இதனைப் பயனாளர் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து அறிவிப்பு நகல் எடுத்திடும் பயன்பாட்டினையும், சமூகநலக் கூடங்களை இணையவழி மூலம் முன்பதிவு செய்தல் செயல்பாட்டினையும் மேயர் பிரியா இன்று (13.08.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மேயரின் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, கல்வித்துறையின் சார்பில் சென்னை பள்ளிகளில் பயிலும் தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியர் மாணவ, மாணவியருக்கு மேயர் சீருடைகளை வழங்கினார்.

வருவாய்த்துறை

மேயரின் 2024-25ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், வருவாய்த்துறையால் வழங்கப்படும் புதிய/மறு மதிப்பீடு, சொத்துவரி மதிப்பீடு, சொத்துவரி பெயர் மாற்றம், தொழில் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் உண்மைத் தன்மையை பொதுமக்கள் அறியும் வகையிலான விரைவுத் தகவல் குறியீடு (QR Code) தொழில்நுட்பப் பயன்பாடு நடைமுறைப் படுத்தப்படும் எனவும், வருவாய்த்துறையால் வழங்கப்படும் புதிய/மறு மதிப்பீடு, சொத்துவரி மதிப்பீடு, சொத்துவரி பெயர் மாற்றம், தொழில் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பயனாளர்கள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து நகல் எடுத்திட வழிவகை ஏற்படுத்தப்படும் எனவும், 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சமூகநலக் கூடங்களை முன்பதிவு செய்யும் முறையினை இணையவழி வாயிலாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனை நிறைவேற்றும் வகையில், மேயர் வருவாய்த்துறையில் விரைவுத் தகவல் குறியீடு (QR Code) தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து நகல் எடுத்தல் மற்றும் சமூக நலக் கூடங்களை இணையவழி வாயிலாக முன்பதிவு செய்தல் ஆகிய அறிவிப்புகளை இன்று பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

கல்வித்துறை

மேலும், மேயரின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 2024-25ஆம் ஆண்டு கல்வியாண்டில் சென்னை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியர் மாணவர்களுக்கு ரூ.66 லட்சம் மதிப்பில் பயிற்சி மற்றும் சீருடைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடங்கி வைக்கும் விதமாக, முதற்கட்டமாக 2024-25ஆம் கல்வியாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை பள்ளி தேசிய மாணவர் படை (NCC) மாணவ, மாணவியரில் எம்.எச்.சாலை-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 50 மாணவிகள், சைதாப்பேட்டை-சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 100 மாணவிகள் மற்றும் சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள், பந்தர் கார்டன் சென்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 50 மாணவர்கள், எம்.ஜி.ஆர். நகர்-சென்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்கள் என மொத்தம் 400 தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியர் மாணவர்களுக்கு மேயர் ரூ.11,82,300 மதிப்பிலான சீருடைகளை இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர்.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர்.ந.இராமலிங்கம், கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) ஆர்.லலிதா, இ.ஆ.ப., இணை ஆணையாளர் (கல்வி) ஜெ. விஜயா ராணி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள் த.விசுவநாதன் (கல்வி), சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரிவிதிப்பு மற்றும் நிதி), மாநகர வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு மற்றும் வருவாய்த்துறை, கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post நிதிநிலை அறிக்கையின்படி வருவாய்த்துறை, கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை செயல்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார் மேயர் பிரியா..!! appeared first on Dinakaran.

Tags : Mayor Priya ,CHENNAI ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு...