×

வளைந்த முதுகு… வழி சொல்லும் இயன்முறை மருத்துவம்!

நன்றி குங்குமம் தோழி

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

சமீபத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனை முதுகு வலி காரணமாக அவரது பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். தசைகளை பரிசோதனை செய்து பார்த்ததில் ஒருபக்கம் முதுகு வளைந்திருந்தது. இதனால்தான் முதுகு வலி வந்திருந்தது என்பதை உறுதி செய்து, அதற்கேற்ப ஆலோசனைகளையும், உடற்பயிற்சிகளையும் வழங்கினேன். இந்த வகை பிரச்னை பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது என்பதால், இதனை இங்கே பொதுவில் கட்டுரையாக விரிவாக தெரிந்து கொள்வோம், வாருங்கள்!

முதுகுத் தண்டுவடம்…

மூளையின் தொடர்ச்சியாக முதுகுத் தண்டுவடம் கீழ் நோக்கி சென்று இடுப்புப் பகுதியில் முடியும். இதனை பாதுகாக்கவே முதுகுத் தண்டுவட எலும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக கீழ் நோக்கி சென்று முடியும். இந்த எலும்பு மற்றும் மூட்டுகள் உறுதியாக இருக்கவும், குனிந்து நிமிர்ந்து என வேலைகள் செய்யவும் தசைகள் அமைந்திருக்கின்றன. இதனோடு கூட மூட்டுகளை சுற்றி ஜவ்வுகள் மேலும் வலு சேர்க்க அமைந்திருக்கின்றன.

ஸ்கோலியோசிஸ்…

*மேலே சொன்ன முதுகுத் தண்டுவட அமைப்பில் எதிர்மாறாக ஆங்கில எழுத்தான ‘சி’ மற்றும் ‘எஸ்’ வடிவில் பக்கவாட்டாக முதுகுத் தண்டுவடம் வளைந்திருக்கும். அதாவது, நேரே நின்று பார்த்தால் ஒரு பக்கம் வளைந்தார் போல் நிற்பர்.

*தசைகளால் வருவது, எலும்பு மூட்டுகளால் ஏற்படுவது என இரு வகைகள் உண்டு.

காரணங்கள்…

*பெரும்பாலான நேரம் காரணங்கள் இல்லாமல் ஸ்கோலியோசிஸ் வருவதை ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.

*நம்மை அறியாமல் ஒரு பக்கமாக உட்காருவதால் காலப்போக்கில் தசைகளும் அவ்வாறு பழகிவிடும். இதனால் ஏற்படலாம்.

*சில புத்தகப் பைகள் ஒரு பக்கம் மட்டும் அணிந்து கொள்வது போன்ற வடிவமைப்பில் இருக்கும். அதனை அதிக எடையோடு தினசரி சுமக்கும் போது தசைகள் மாற்றம் பெறும்.

*சிலர் ஸ்டைல் என நினைத்து ஒரு பக்க தோள்பட்டையை தூக்கியவாறு எப்போதும் இருப்பதாலும் முதுகு வளைய காரணமாக அமைகிறது.

*பிறவியிலேயே சில குழந்தைகளுக்கு முதுகு எலும்பு உருவாகும் போதே வளைந்து அமைந்திருக்கும்.

*நரம்பு மற்றும் மரபணு சார்ந்த நோயுடன் பிறந்த குழந்தைகளுக்கும் முதுகு வளைவோடு பிறக்கும் வாய்ப்புகள் அதிகம்.

*இவை தவிர விபத்து மூலம் வருவது, முதுகுத் தண்டுவட புற்று நோய், இதற்கு முன் வீட்டில் மூத்தோர்கள் யாருக்கேனும் இருந்தால் என சில அரிய வகை காரணங்களும் உள்ளன.

கண்டறிவது எப்படி..?

*அதீத வளைவு இருந்தால் பார்த்தாலே உறுதி செய்திடலாம்.

*சிலருக்கு எக்ஸ்ரே கதிர் மூலம் வளைவு பத்து டிகிரிக்கும் மேல் இருந்தால் அதனை உறுதி செய்யலாம்.

*வீட்டில் நாமே கண்ணாடிமுன் நின்று நமக்கு இப்பிரச்னை இருக்கிறதா என தெரிந்து கொள்ளலாம்.

*ஒரு பக்கம் தூக்கிய தோள்பட்டை, பக்கவாட்டில் வளைந்த இடுப்பு பகுதி, தூக்கிய தோள்பட்டையின் பக்கம் உள்ள இடுப்பு ஏற்றமாகவும் மறுபக்கம் இறக்கமாகவும் இருக்கும்.

*பதினெட்டு வயதிற்கு முன் கண்டறிவது நல்லது. ஏனெனில், எலும்புகள் முழுதாக கூடாமல் இருக்கும் என்பதால், எளிதாய் விரைவில் சரி செய்து விடலாம்.

இயன்முறை மருத்துவம்…

இதனை மருந்து, மாத்திரைகள் மூலம் சரி செய்ய இயலாது. முறையான இயன்முறை மருத்துவ சிகிச்சைகளால் மட்டுமே சரி செய்ய இயலும். மேலும், வெகு சிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காணலாம்.

*ஸ்கோலியோசிஸ் பிரச்னையால் வரும் முதுகு வலி, கால் மருத்து போவது, கழுத்து வலி போன்றவைக்கு வலி நிவாரண உபகரணங்கள், சிறப்பு நுட்பங்கள் மூலம் வலியினை குறைப்பர்.

*மேலும் ஒரு பக்க இடுப்பு தசைகள் இறுக்கமாகவும் (Tightness) மறு பக்கம் பலவீனமாகவும் (Weakness) இருக்கும். எனவே, தசைகளுக்கு தேவையான தளர்வு மற்றும் வலிமை பயிற்சிகள் வழங்கப்படும். இதனால் தசைகளால் மட்டும் ஏற்படும் ஸ்கோலியோசிஸ் பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

*சிலருக்கு நெஞ்சு முதல் இடுப்பு வரை பெல்ட் போன்ற ஒன்றை அணிவதற்கான அவசியம் இருக்கும். இதனை அளவு எடுத்து எந்த பக்கம் எவ்வளவு வளைவு இருக்க வேண்டும் என எல்லாம் அளந்து பெல்டினை பரிந்துரைத்து வடிவமைப்பதும் இயன்முறை மருத்துவரே.

*சிலருக்கு அதீத வளைவு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது. அதிக சளி சேர்வது போன்ற தொந்தரவுகள் இருக்கும். இதற்காக மூச்சுப் பயிற்சிகள் மற்றும் சளியினை எளிமையாக எப்படி இருமல் மூலம் வெளியேற்றுவது போன்ற சில நுட்பங்களையும் கற்றுக் கொடுப்பர்.

*மேலும், ஸ்கோலியோசிஸ் பிரச்னையால் வரும் கழுத்து வலி, முதுகு வலி, கால் முட்டி வலி என தொந்தரவுகள் வராமல் தடுக்க உடற்பயிற்சிகளும் பரிந்துரைத்து கற்றுக்கொடுப்பர்.

*தசைகளால் வரும் ஸ்கோலியோசிஸ் பிரச்னைக்கு குறைந்தது ஆறு மாதத்தில் தீர்வு காணலாம்.

மொத்தத்தில் எலும்பு மூட்டு சார்ந்த பிரச்னைகளை நாம் ஆரம்பம் முதலே கவனிக்காமல், வலியும் விளைவுகளும் வந்த பின் மருத்துவத்தை நாடாமல், முன்னரே இயன்முறை மருத்துவர் உதவியுடன் தீர்வு காண்பதே மிக மிக நல்லது.

The post வளைந்த முதுகு… வழி சொல்லும் இயன்முறை மருத்துவம்! appeared first on Dinakaran.

Tags : Gomati Isaikar ,Iyensystem ,Doctor ,
× RELATED ஆஸ்டியோபோரோசிஸ் காரணமும் தீர்வும்!