சிவகாசி: சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது. தூண் அமைக்க 20 அடிவரை குழி தோண்டிய நிலையில் மூடப்பட்டது. இதனால் சிவகாசி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சிவகாசியில் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க 2021ல் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கு ரூ.61 கோடியே 77 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். கடந்த மாதம் 18 மற்றும் 19ம் தேதியில் மாற்றுப்பாதைகளில் வாகனங்களை இயக்கி சோதனை நடைபெற்றது. கடந்த மாதம் 26ம் தேதி பூமிபூஜை போட்டு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது.
பாலம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இது குறித்து தினகரனில் நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் ரயில்வே மேம்பாலம் பணிகள் நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. ஜேசிபி, கிட்டாச்சி உதவியுடன் குழி தோண்டும் பணிகள் நடைபெற்றது. இதற்காக குழி தோண்டும் பகுதியை சுற்றி பேரிகார்டுகள் வைக்கப்பட்டன. பணிகள் தொடங்கிய போது போலீசார் இல்லாததால் சாலையின் இரண்டு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து இரட்டை பாலத்தில் இருந்து லாரிகள், பஸ்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் விளாம்பட்டி ரோடு, ஆனையூர், லட்சுமியாபுரம் வழியாக திருப்பி விடப்பட்டன.
சுமார் ஒரு மணி நேரம் 20 அடி வரை குழி தோண்டிய நிலையில் திடீரென பணிகள் நிறுத்தப்பட்டன, தோண்டிய குழியில் மீண்டும் மண் போட்டு மூடப்பட்டன. பணிகள் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் பணிகள் நிறுத்தப்பட்டதால் சிவகாசி மக்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
எம்எல்ஏ-அதிகாரிகள் மோதல்?
சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து பலமுறை நெடுஞ்சாலைதுறை, காவல்துறை, வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சிதுறை, போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் சிவகாசி எம்எல்ஏ அசோகன் கலந்தாய்வு செய்துள்ளார். பலமுறை அதிகாரிகளுடன் சென்று மாற்றுப்பாதைகளில் ஆய்வும் செய்தார். தொடர்ந்து மாற்றுப்பாதைகளில் 2 இடங்களில் சுமார் 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலையும் எம்எல்ஏ வளர்ச்சி நிதியில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் 12ம் தேதி பணிகள் தொடங்கும் என்று எம்எல்ஏ தெரிவித்தார்.
ஆனால் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை. இருந்த போதிலும் நேற்று சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மூலம் அசோகன் எம்எல்ஏ உதவியாளர் சதீஷ் நேரடி கண்காணிப்பில் போலீஸ் பாதுகாப்பு இன்றி பணிகள் தொடங்கப்பட்டது. இது குறித்து கேள்விப்பட்ட அதிகாரிகள் டென்சன் ஆகிவிட்டனர். உடனடியாக பணிகளை நிறுத்த வேண்டும் என்று சப்-கலெக்டர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. இதனால் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. பாலம் அமைக்க எம்எல்ஏ மிகவும் ஆர்வமாக இருந்த போதிலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் பாலம் அமைக்கும் பணிகள் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
17ம் தேதிக்குபின் மீண்டும் ஆலோசனை கூட்டம்
சிவகாசி எம்எல்ஏ அசோகன் கூறும்போது, பணிகள் தொடங்குவதற்கு முன்பு முறைப்படி அனைத்து துறை அதிகாரிகளுடன் கடந்த 10ம் தேதி கலந்தாய்வு செய்யப்பட்டது. பணிகள் தொடங்கும் தேதி, நேரம் தேவையான பாதுகாப்பு குறித்து டிஎஸ்பியிடம் நேற்று முன்தினம் முறைப்படி தபால் கொடுத்துள்ளேன். இன்று(நேற்று) முறைப்படி பணிகள் திட்டமிட்டபடி தொடங்கியது. மாற்றுப்பாதை சரியான முறையில் இல்லை என்று காரணம் கூறி பணிகளை அதிகாரிகள் திடீரென நிறுத்தி விட்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தொலைபேசியில் பேசினேன்.
மீண்டும் ஒருமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கொண்டு ஆலோசனை செய்து பணிகளை தொடங்கலாம் என்று கூறினார். எனவே வரும் 17ம் தேதிக்கு பிறகு மீண்டும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்குபிறகு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றார்.
The post சிவகாசியில் ரயில்வே மேம்பாலம் பணிகள் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் நிறுத்தம்: 20 அடி தோண்டிய நிலையில் மூடப்பட்டது appeared first on Dinakaran.