கரூர், ஆக. 13: கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கோரிக்கை மனுக்களுடன் வந்து மனு அளித்துச் சென்றனர்.
அப்போது, இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், கலெக்டர் அலுவலக போர்டிகோ முன்பு வாகனத்தில் இருந்தபடியே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொள்ள முயன்றார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டனர். தொடர்ந்து, அருகில் இருந்த போலீசார்களும், அவரை ஆசுவாசப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது, வெங்கமேடு பகுதியை சேர்ந்த பாபு என்பதும், மாற்றுதிறனாளியான இவர், கடந்த சில ஆண்டுகளாக கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தனக்கு வீடு ஒதுக்கித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருப்பதோடு, மாற்றுத்திறனாளியான தன்னை அலையவிடுவதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதாக அதிகாரிகள், மாற்றுத்திறனாளியை உள்ளே அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக சிறிது நேரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
The post கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.