×
Saravana Stores

தீவிர தூய்மை பணி திட்டத்தில் 8 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அகற்றம்: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

* சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனின் அதிரடி நடவடிக்கை; புதுப்பொலிவு பெறும் மாநகர்

சென்னை: சென்னையில் தீவிர தூய்மை பணி திட்டத்தில், கடந்த 2 வாரத்தில் 8 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டவுடன் சென்னை மாநகராட்சியின் அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக, முக்கிய பிரச்னையாக உள்ள குப்பை, நெரிசல், சாலை ஆக்கிரமிப்பு, தெருவிளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை போன்ற பிரச்னைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் சென்னையில் தூய்மை பணி என்பது சவால் நிறைந்தது. ஒரு நாள் குப்பை அகற்றாமல் விட்டால் கூட, குப்பை தொட்டிகள் நிரம்பி வழிந்து மக்கள் செல்லும் பாதைகளில் சிதறும் நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், போர்க்கால நடவடிக்கையாக இரவு நேரங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனால் மாநகராட்சி அதிகாரிகளும் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.

அதன்படி, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 4,18,569 மீட்டர் நீளம் கொண்ட 488 பேருந்து சாலைகளில், பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சீராக செல்வதற்கும், நடைபாதைகளில் மக்கள் சிரமமின்றி சீராக செல்வதற்கும் ஏற்றவகையில் கடந்த மாதம் 22ம் தேதி இரவு 10 மணி முதல் தீவிர தூய்மை பணி தொடங்கப்பட்டது. இதில், மாதவரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து சாலைகளில் கடந்த ஜூலை 22 முதல் மெகா தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மாநகராட்சியின் அனைத்து பேருந்து சாலைகளிலும் மெகா தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதை தொடர்ந்து, உட்புறச் சாலைகளில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்மூலம் சாலையில் இடையூறாக உள்ள மரக்கிளைகள், வயர்களை அகற்றுவது, மின்விளக்குகளை பழுது செய்வது, சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த தூய்மை பணிகள் வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் தினசரி இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த தூய்மை பணிகளை மொத்தம் 9504 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஏறத்தாழ 200க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் என 6617 பேர் பணியாற்றி வருகின்றனர். அதாவது மொத்தம் 757 இடங்களில் தீவிர தூய்மை பணி மேற்கொள்ளபடுகிறது. வாகன உதவியுடன் குப்பை அகற்றும் பணியில் 2750 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இரவு நேரங்களில் 1169 பேட்டரி வாகனங்கள் மூலமும், 333 பெரிய காம்பேக்டர் லாரிகள் மூலமும், 2டன், 5 டன், 6 டன், 8டன், 10 டன் என மொத்தம் 465 டிப்பர் லாரிகள் மூலமும் குப்பை சேகரிப்படுகிறது.

இது தவிர்த்து 119 இதர வாகனங்களும் குப்பைகளை சேகரிக்க பயன்படுத்தப்படுகிறது. இப்படி, கடந்த மாதம் 22ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை சுமார் 8195 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. இதில் வீட்டு குப்பை சுமார் 944.38 மெட்ரிக் டன் குப்பைகளும், கட்டிட கழிவு, மரக்கிளை கழிவு, என 7251 மெட்ரிக் டன் குப்பையும் போர்க்கால நடவடிக்கை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை காலை நேரங்களில் குப்பையை அள்ளும் போது அந்த பகுதிகளில் சிறிதளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது நள்ளிரவில் குப்பையை அள்ளும் போது இந்த போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுகிறது. இதனால், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு கொஞ்சம் சிரமம் இன்றி செல்ல முடியும் என்று வாகன ஓட்டிகளும் சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

The post தீவிர தூய்மை பணி திட்டத்தில் 8 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அகற்றம்: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Commissioner ,Kumaragurubaran ,Chennai ,Chennai Municipal Corporation ,
× RELATED சென்னை மாநகராட்சியில் மேம்பாலம், சாலை...