×

12 ஆண்டாக மாட்டு கொட்டகையில் மறைத்து வைப்பு வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி பெருமாள் சிலை மீட்பு: 7 பேர் கும்பல் அதிரடி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே 12 ஆண்டுகளாக மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்து வெளிநாட்டில் விற்பதற்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான பெருமாள் சிலையை மீட்ட போலீசார், 7 பேர் கும்பலை அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழா பட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 2 டூ வீலர்களில் சோதனை நடத்தினர்.

இதில் காரில் இரண்டரை அடி உயரத்தில் உலோகத்தாலான பழங்கால பெருமாள் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜேந்திரன்(52), கும்பகோணம் தாலுகா ராஜ்குமார்(36), திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த இனாம்கிளியூர் தினேஷ்(28), ஜெய்சங்கர்(58), கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுகா, நாட்டார்மங்கலம் விஜய்(28), டூவிலர்களில் நின்ற தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, மகாராஜபுரம் ஹாரிஸ் (26), கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் அஜித்குமார்(26) ஆகியோர் என தெரியவந்தது.

அவர்கள் 7 பேரையும் கைது செய்து சிலை, கார், 2 டூ வீலர்களை பறிமுதல் செய்தனர். இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘தினேஷின் தந்தை 12 ஆண்டுக்கு முன் தொழுவூர் ஆற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த போது, இரண்டரை அடி உயர சிலை கிடைத்துள்ளது. இதுபற்றி வருவாய்த்துறைக்கு தெரிவிக்காமல் தங்களது மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்துள்ளார்.

தந்தை மறைவுக்கு பிறகு, அந்த சிலையை கண்டெடுத்த தினேசும், யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் வெளிநாட்டில் விற்பதற்கு முயன்றுள்ளார். இதற்காக நண்பர்கள் மூலம் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் உதவியை நாடியுள்ளார். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது. இந்த சிலை 16ம் நூற்றாண்டு சோழர்கள் காலத்தை சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேல் இருக்க கூடும்’ என்றனர்.

The post 12 ஆண்டாக மாட்டு கொட்டகையில் மறைத்து வைப்பு வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி பெருமாள் சிலை மீட்பு: 7 பேர் கும்பல் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Perumal ,Cargo ,Dinakaran ,
× RELATED பூதலூர் ஊராட்சியை பேரூராட்சியாக...