×

ஒன்றிய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம்

புதுடெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டிவி சோமநாதன் ஒன்றிய அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை செயலாளராக ராஜீவ் கவுபா உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி முதல் 5 ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரியான டி.வி. சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

1987ம் ஆண்டு பேட்ச் அதிகாரியான இவர் ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அமைச்சரவை செயலாளராக தற்போது அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆக.30ம் தேதி முதல் இவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார். ஒன்றிய அமைச்சரவை செயலாளராக டி.வி. சோமநாதனை நியமிப்பதற்கு ஒன்றிய அமைச்சரவை நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அவர் பணியில் சேர்ந்த நாளில் இருந்து அமைச்சரவை செயலாளராக பொறுப்பேற்கும் வரையில் அவரை சிறப்பு பணி அதிகாரியாக நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டி.வி.சோமநாதன்,1987 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரி. 2015 முதல் 2017 வரை பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராகவும், கூடுதல் செயலாளராகவும் பணியாற்றினார். 2019 டிசம்பரில் செலவினச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2021 ஏப்ரல் மாதம் நிதிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சிஏ மற்றும் சிஎஸ் படித்த அவருக்கு தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, ஹவுசா (ஆப்பிரிக்கா மொழி), இந்தி ஆகிய 5 மொழிகள் தெரியும்.

The post ஒன்றிய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,TV ,Somanathan ,Union Cabinet ,New Delhi ,Rajeev Gauba ,Modi ,IAS ,
× RELATED சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ்...