×

இந்த வார விசேஷங்கள்

பெருமிழலைக் குறும்பர் குருபூஜை 10.8.2024 – சனி

பெருமிழலைக் குறும்ப நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சிவநெறியை உயிரின் மூச்சாகக் கொண்டவர். சிவனடியார்ருக்கான திருப்பணிகளை விருப்பமுடன் செய்பவர்; சிவபெருமான் திருவடிகளை நெஞ்சத்தாமரையில் இருத்தி வழிபாடு செய்பவர். சதா சர்வகாலமும் இறைவனது திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றுபவர். இவ்வாறு சிவபக்தியிலும், சிவனடியார் பக்தியிலும் சிறந்து வாழும் பெருமிழலைக் குறும்பர், திருத்தொண்டத்தொகை பாடிய சுந்தரர் பெருமையைக் கேள்வியுற்றார். அவரைப் பணிந்து அவருடைய திருவடிகளை நினைந்து போற்றுதலை நியமமாகக் கொண்டார். சுந்தரர் திருவடிகளைக் கையால் தொழுது, வாயால் வாழ்த்தி, மனதால் நினைக்கும் இதுவே சிவபெருமான் திருவடிகளை அடைவதற்குரிய நெறியாகும் என்று மேற்கொண்டார். எட்டு விதமான சித்திகளும் கைவரப் பெற்றார்.

இத்தகைய நியமங்களையுடையாராய்ப் பெருமிழலைக்குறும்பர் வாழ்ந்து வரும் நாளில், சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக் களத்திற் சென்று திருப் பதிகம் பாட அவருக்குச் சிவபெருமான் அருளால் வடகயிலை அடையும் பேறு மறுநாள் கிடைக்க இருப்பதனைத் தம்முடைய ஊரில் இருந்து கொண்டே யோகக் காட்சியால் அறிந்துகொண்டார். தனது குரு சுந்தரர் இல்லாத இந்த உலகில் தான் வாழாது சிவபதம் அடைவேன் என்று வைராக்கியத்தோடு ஐந்தெழுத்து ஓதி தவ நிலையில் பிரம கபாலம் வழியே மின்னல் போல் உயிர் உடலின்றும் பிரிந்து திருக்கயிலை வீற்றிருந்து அருளும் சிவபெருமானது திருவடி நிழலை அடைந்தார். அவர் குரு பூஜை இன்று ஆடி சித்திரை.

குறுக்குத்துறை முருகன் ஆலயம் வீதி உலா
10.8.2024 – சனி

திருநெல்வேலியில் தாமிரபரணி நதியில் தீவுபோல கட்சி தரும் கோயில் குறுக்குத்துறை முருகன் கோயில். இங்கு கருவறையில் பாறையில் குடையப்பட்ட திருமேனியாக வள்ளி, தெய்வானை உடன் நான்கு கரங்கள் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் சுப்பிரமணிய சுவாமி. திருச்செந்தூர் முருகன் விக்ரகத்தை போன்றே சிற்பியால் பாறையில் வடிவமைக்கப்பட்ட திருமேனி இங்குள்ள மேலக் கோயிலில் மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதனால் திருச்செந்தூர் முருகனின் சாந்நித்யம் பெற்றவர் இத்தல சுப்பிரமணியர் என்றும் கூறப்படுகிறது. இங்கு திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு நடைபெறுவதைப் போன்றே வருடத்திற்கு இரண்டு திருவிழாக்கள் நடைபெறுகிறது. இன்று முருகன் வீதி உலா.

இருக்கன்குடி மாரியம்மன் உற்சவம்
10.8.2024 – சனி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் பிரசித்தி பெற்ற கோயில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி மாதத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவுக்காகத் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் பலர், அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து தங்களுடைய நேர்த்திக் கடனைச் செலுத்துவர்.

கருட ஜெயந்தி 11.8.2024 – ஞாயிறு

கருடன் வேதம். கருடனை வணங்கினால் வேதத்தை வணங்கியதாகப் பொருள். கருட வழிபாடு ஆவணி சுவாதியில் வரும். அதோடு இன்று செவ்வாய் சஷ்டி விரதமும் இருக்கிறது. பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் பெருமாளை வழிபடுவதற்கு முன் வணங்க வேண்டிய தெய்வம்தான் கருடாழ்வார். பொதுவாக பெருமாள் திருத்தலங்களுக்குச் செல்பவர்கள் நேராக பெருமாளையும், அனுமனையும், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், வைணவ ஆகம விதிப்படி கருடரை வழிபட்ட பின்னர்தான் பெருமாளை வழிபட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பெருமாள் கோயில் மட்டுமல்லாமல், மற்ற கோயில்களில் கும்பாபிஷேகத்தின் போது வந்து கருடன் வட்டமிட்டால்தான் அந்த கும்பாபிஷேகம் முழுமை அடைந்ததாக, முடிந்ததாக அர்த்தம். கருட வழிபாடு நாகதோஷத்தை நீக்குவதுமட்டுமல்லாது, வியாதிகளை நீக்கும், மரண பயத்தை நீக்கும் வல்லமை வாய்ந்தது. குழந்தைப் பேறு கிட்டும். இன்று பெருமாள் கோயில்களில் விசேஷ திருமஞ்சனம் நடக்கும். கலந்து கொள்ளுங்கள். சர்ப்பதோஷம் நீங்க, விஷம் நீங்க ஸ்ரீகருட காயத்ரி ஜெபம் செய்யுங்கள்.

“ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி
தன்னோ கருட ப்ரசோதயாத்’’

நயினார்கோயில் சௌந்தர நாயகி மஞ்சள் நீராட்டு 11.8.2024 – ஞாயிறு

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருமருதூர் எனும் நயினார்கோயில் அருள்மிகு ஸ்ரீசௌந்தர நாயகி சமேத அருள்மிகு ஸ்ரீநாகநாதர் ஆலய ஆடிப்பூர திருக்
கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெறும். நாகதோஷம் நீக்கும் இந்த அம்மனுக்கு இன்று மஞ்சள் நீராட்டு விழா.

கலிய நாயனார் குருபூஜை 14.8.2024 – புதன்

சென்னையில் உள்ள திருவொற்றியூரிலே செக்கார் என்னும் குலத்திலே பிறந்தவர். செல்வந்தர். சிவனின்மீது பக்தி கொண்டவர். திருவொற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும்விளக் கேற்றும் சிவத் தொண்டினை இவர் செய்து வந்தார். ஊழ்வினையால் இவரது செல்வங்கள் யாவும் கரைந்துபோனது. ஆனாலும் சிவனுக்கு விளக்கேற்றும் தொண்டினை இவர் விடாமல் செய்தார். கூலிக்கு வேலை செய்து வரும் வருவாய் கொண்டு திருவிளக்கேற்றினார். அதிலும் கஷ்டம் ஏற்பட்டது. தன் வீட்டில் இருந்த பண்ட பாத்திரங்களை விற்று விளக்கேற்றிவந்தார். வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீர்ந்து போக தன்னுடைய சொத் துக்கள் யாவையும் விற்றுவிட்டார், இப்போது விற்பதற்கு ஏதும் இல்லை, விளக்கேற்ற எண்ணெய் வாங்கவும் பணம் இல்லை. திருக்கோயிலுக்குச் சென்றார். ‘‘இறைவா, இந்த விளக்கேற்றும் திருப்பணி நின்றுவிட்டால், நான் என் உயிரையே மாய்த்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறியதோடு நில்லாமல், நீண்டதொரு அரிவாளை எடுத்து அங்கத்தை அரிந்து, தன் உதிரத்தை விளக்கில் கொட்ட முயற்சித்தார். அப்போது அங்கு எழுந்தருளிய சிவபெருமான் அவரின் கரத்தைப் பிடித்து தடுத்தாட் கொண்டார். கோயிலில் இருந்த விளக்குகள் அனைத்திலும் எண் ணெய் நிரம்பி, விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கின. கோயில் முழுக்க சிவபெருமானின் பேரொளி படர்ந்தது. சிவனைக் கண்டதும் தன் மனைவியோடு சேர்ந்து இரு கரங்களையும் தன் தலையின் மீது குவித்து சிவபெருமானை வணங்கினார் கலிய நாயனார். அவருடைய குரு பூஜை நாள் இன்று.

கோட்புலி நாயனார் குருபூஜை 14.8.2024 – புதன்

கோட்புலியர் என்றும், கோட்புலி நாயனார் என்றும் அழைக்கப்படும் கோட்புலி நாயனார், 63 நாயனார்களின் பட்டியலில் ஐம்பத்தி ஏழாவது நாயனாராகக் கணக்கிடப்படுகிறார். இவர் சுந்தரரின் (8 ஆம் நூற்றாண்டு) சமகாலத்தவராக விவரிக்கப்படுகிறார். தஞ்சாவூர் மாவட்டம், நாட்டியத் தான் குடியில் (நாட்டியாட்டாங்குடி) பிறந்தார். வேளாளர். சிவபெருமானின் சிறந்த பக்தர். சோழர்களின் படைத்தளபதியாக இருந்தார். பல ஆண்டுகளாக, சிவன் கோயில்களில் நிவேதனத்துக்காக அரிசியை தானம் செய்ய தனது செல்வத்தைப் பயன்படுத்தினார். அவர் அரசு வேலையாக வெளியூர் செல்லும்போது தனது வீட்டில் அரிசி மூட்டைகளைச் சேமித்துவைத்தார். அவர் இல்லாத நேரத்தில் நைவேத்தியத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று தனது உறவினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தினார். அப்போது நாட்டியத்தான் குடியில் பஞ்சம் ஏற்பட்டது. கோட்புலியின் குடும்பத்தினர் சிவனுடைய பூஜைக்கான தானியங்களை தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எடுத்து உட்கொண்டனர். போர் முடிந்து கோட்புலி திரும்பினார். அவர் தனது உறவினர்களின் செயல்களை அறிந்து அவர்களை கடுமையாகத் தண்டித்தார். அவரது தீவிர பக்தியின் உக்கிரத்தை சிவபெருமான் தோன்றி தடுத்தார். பேரருள் காட்சியும், பேரின்ப வாழ்வும் அளித்தார். நாட்டியத் தான் குடியில் வழிபட்ட சிவனைப் பற்றிய பாடலில், சுந்தரர் கடைசிப்பாடலை கோட்புலிக்கு அர்ப்பணித்தார். அவர் குருபூஜை நாள் இன்று.

10.8.2024 – சனி – சஷ்டி.
11.8.2024 – ஞாயிறு – சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை.
11.8.2024 – ஞாயிறு – சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜை.
12.8.2024 – திங்கள் – குதம்பைசித்தர் குருபூஜை.
13.8.2024 – செவ்வாய் – குரங்கணி முத்து மாரியம்மன் பவனி.
14.8.2024 – புதன் – திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
14.8.2024 – புதன் – வேதாத்திரி மகரிஷி.
15.8.2024 – வியாழன் – விஷ்ணுபதி புண்ணிய காலம்.
16.8.2024 – வெள்ளி – ஏகாதசி.

 

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Nayanar ,Nayanmar ,Red ,Sivandiyaru ,Sivaberuman ,Nenjathamara ,
× RELATED கட்சியில் எனக்கும் பதவி இல்லை பாஜ –...