×

திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன்

“எந்த ஒரு பெயரைச் சொன்னால் பிறவித் தளையை அறுத்து சகல நன்மைகளையும் அளிக்கும்?” என்று ஒருவர் நம்மாழ்வாரிடம் கேட்க, நம்மாழ்வார் “திருவனந்தபுரம் பெருமாள் பெயரைச் சொல்லுங்கள்” என்று மிகவும் அழுத்தமாகச் சொன்னார்.

“புண்ணியம் செய்து நல்ல புனலோடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம்
இப்பிறவிக்கு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
செறிபொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார்’’
அருமையான இந்தத் திருவாய்மொழி பாசுரம் மனதில் ரீங்காரமிட திருவனந்தபுரம் உடனே போய் சேவிக்கும் ஆவலில் திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் இறங்குகிறோம்.

திருவனந்தபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனந்த பத்மநாத சுவாமி கோயில். ஆட்டோ டவுன் பஸ் வசதி உண்டு. கம்பீரமான சற்று அகலமான ராஜகோபுரம் தூரத்திலிருந்து பார்த்தாலும் எழிலாகத் தெரியும். பரபரப்பான கடைத் தெரு. பெரிய புஷ்கரணி. உயரமான படிகள்.உள்ளே நுழைவதற்கு, முன் கோயிலின் தல வரலாறு சற்று சிந்திக்கலாம்.

திவாகர முனி என்று ஒரு துறவி. அவருக்கு வியூக நாதனான பாற்கடல் நாதனைக் காண வேண்டும் என்று தணியாத ஆசை. ஆசைப்பட்டதை அடைய முயற்சி செய்கிறார். பெருமாளைக் குறித்து கடுமையான தவம் மேற்கொள்ளுகிறார். தவத்தைக் கருத்தில்கொண்டான் பரமன். சின்னக் குழந்தையாகக் காட்சி தருகிறான். அவர்தான் பரமன் என்பதை அறிந்தாரோ இல்லையோ, ஆனால் முனிவர் குழந்தையின் அழகில் மயங்கினார் தன்னுடனே குழந்தையை வைத்துக் கொண்டார்.

காலம் சென்றுகொண்டே இருந்தது. பரந்தாமன் ஒரு திருவிளையாடலை நடத்திப் பார்க்க ஆவல்கொண்டான். முனிவர் தினமும் தவறாது சாளக்கிராம பூஜை செய்வார். அவர் பூஜை செய்யும் சாளக்கிராமத்தினை எடுத்து வாயில் வைத்தான் குழந்தை. இதைப் பார்த்த முனிவர் “பெருமாளை எச்சில் செய்கிறாயா? என்று கோபித்து, குழந்தையை அடிக்க கை ஓங்கினார். குழந்தை முனிவரின் அடியிலிருந்து தப்பிக்க ஓடினான். கடைசியில் ஒரு காட்டுக்குள் குழந்தை ஓடி மறைந்தான். இப்போது குழந்தையின் மீது கொண்ட கோபம் போயிற்று.

ஐயோ குழந்தையைக் காணவில்லையே என்று கவலை வந்தது. அன்புக்கு குழந்தையைத்தேடி அங்கும் இங்கும் அலைந்தார். ஏக்கத்தோடும் ஏமாற்றத்தோடும் அவர் ஒரு இலுப்பை மரம் அருகே வந்த போது அம் மரம் சடார் என்று முறிந்து விழுந்தது. அங்கே மிகப்பெரிய பிரம்மாண்டமான உருவத்தில் அனந்த பத்மநாபன் காட்சி தந்தார். மிகப்பெரிய வடிவில் அவர் தோற்றம் இருந்தது. அவரின் திருமுகம் திருவல்லத்திலும், சரீரம் திருவனந்தபுரத்திலும், பாதம் திருப்பாம் புரத்திலும் இருக்கக் கண்ட முனிவர், ‘‘இவ் வளவு பெரிய உருவை ஒரே நேரத்தில் காணும் சக்தி தனக்கு இல்லாததால் சிறிய உறவில், தான் தரிசிக்கும் படியாகக்காட்சி தருமாறு இறைவனை வேண்டிக் கொண்டார்.

வேண்டுவார்க்கு வேண்டியதைத் தரும் பகவான் தன் பேருருவைச் சுருக்கி இப்போதுள்ள வடிவத்தில் காட்சி தந்தான். முனிவர் வம்சத்தவர்களான பிராமணர்களே (துளு வம்ச பிராமணர்கள் – கேரள நம்பூதிரிகள்) இன்று வரை தங்கள் முறைப்படி பூஜை செய்து வருகின்றனர். இன்னொரு கதையும் இருக்கிறது. சுவாமிக்கு நிவேதனம் முக்கியமல்லவா! ஒரு முறை பூஜை செய்த பிராமணருக்கு நிவேதனம் (தளிகை) செய்ய ஏதும் கிடைக்கவில்லை. அவர் தவியாய்த் தவித்தார். தன் பசியை கூடப் பொறுத்துக்கொள்ளும் அவர், இறைவனுக்கு நிவேதனம் செய்யாமல் இருக்கிறோமே; அவன் பசியோடு இருப்பானே என்கிற தாய்மை உணர்வோடு துடித்தார்.

பக்கத்திலே ஒரு மாமரம் இருந்தது. சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. பூஜைக்கு முக்கியம் பூஜிக்க வேண்டும் என்ற மனம் மட்டுமே. இலையோ, காயோ, பழமோ, நீரோ எதுவாக இருந்தாலும் பக்தியோடு சமர்ப்பித்தால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றுதானே பெருமான் கீதையிலே சொல்லியிருக்கிறான். மாமரத்தில் இருந்து சில மாங்காய்களைப் பறித்தார். சின்ன தேங்காய் மூடி ஒன்று எடுத்து அதில் அந்த மாங்காய்களை வைத்து இறைவனுக்கு நிவேதனமாக படைத்தார்.

இறைவன் அதை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டான். இந்தக் கோவிலின் சிறப்பான நைவேத்தியம் உப்பு மாங்காய் ஆகும், (பழுக்காத மாங்காய்த் துண்டுகள் உப்புக்கரைசலில் ஊறவைத்தது), அது ஒரு தங்கத்தால் பூசப்பட்ட தேங்காய் ஓட்டில் வழங்கப்படுகிறது. இந்த தேங்காய்ச் சிரட்டை 1200 வருடங்களுக்கும் மேல் பழமையானதாகும். அன்று வில்வமங்கலத்து திவாகர முனிவர் படைத்த அதே சிரட்டையில் தடித்த தங்கத்தின் ஏடுகளால் வெளிப் பாகத்தில் பொதிந்து, இன்றுவரை பாதுகாத்து வருகிறார்கள்.

இந்தப் பின்னணிக் கதையோடு ஆலயத்தில் நுழைவோம்.ஆலய முகப்பு தமிழகத் திருத்தலங்களைப் போன்றே கம்பீரமான ராஜகோபுரத்தோடு இருக்கிறது. உள்ளே உள்ள கட்டட அமைப்பு கேரளத்து அமைப்பில் இருக்கிறது. ஆசாரம் அதிகம். சட்டை கழற்றினால்தான் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கிறார்கள். சந்நதியின் தெற்குப் பிராகாரத்தில் யோக நரசிம்மன் எழுந்தருளி இருக்கிறார். ஒருபுறம் ஆஞ்சநேயரும் கிருஷ்ணரும் எழுந்தருளி இருக்கிறார்கள். 16ஆம் நூற்றாண்டில் இந்தத் திருக்கோயிலுக்குப் பேராபத்து ஏற்பட்டது. தீப்பிடித்து திருக்கோயில் பகுதிகள் முற்றிலும் சேதம் அடைந்தன. பின்னர் கேரள மன்னர் ராஜமார்த்தாண்டவர்மன் இந்தக் கோயிலையும் திருவுருவத்தையும் புதுப்பித்தான்.

இந்த மன்னருக்கு பத்மநாபன்மீது எல்லையற்ற பக்தி. தன்னுடைய நாடு, சொத்து எல்லாவற்றையும் பத்மநாபனுக்கே சமர்ப்பித்துவிட்டான். தானும் தன் குலமும் பத்மநாபனுக்கே அடிமை என்று சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டான். இம்மன்னன் பரம்பரையினர் பத்மநாப பெருமாளின் பிரதிநிதியாகவே ஆட்சி நடத்தினர். இன்று மன்னர் ஆட்சி இல்லை. மக்களாட்சி தான். ஆயினும் மன்னர் பரம்பரையினர் பத்மநாபதாசர்களாகவே வாழ்கின்றனர் அரச பரம்பரை முதல் தரிசனமும் மரியாதையும் பெறுகின்றனர்.

இந்தத் திருத்தலத்துக்கு நம்மாழ்வார் மட்டுமே பதிகம் பாடி மங்களாசாசனம் செய்திருக்கிறார். கேரளநாட்டு நாயகரான குலசேகர ஆழ்வார் ஏனோ மங்களாசாசனம் செய்யவில்லை.
இனி ஆலயத்தில் மூலவரை தரிசனம் செய்வோம். அன்று மிகப்பெரிய உருவமாய் காட்சி தந்த அனந்த பத்மநாபன் முனிவரின் வேண்டுகோளை ஏற்று சிறிய வடிவில் காட்சி தந்ததாகப் பார்த்தோம்.

முனிவருக்குக் காட்சி தந்த சிறிய வடிவமே இன்று நமக்குப் பெரிய வடிவமாகத் திகழ்கிறது. மரபுப்படி தலை உடல் திருவடி என்று மூன்று வாசல்கள் வழியே தனித்தனியே சேவிக்க வேண்டும். என்ன அழகான திருமேனி! ஆதிசேஷ சயனம். ஒய்யாரமாக மல்லாந்து படுத்தபடி வலது திருக்கரம் கீழே இருக்க இடது திருக்கரத்தில் தாமரை மலர் என்று இருக்கிறார். நாபிக் கமலத்திலிருந்து எழுந்த தாமரைப் பூவில் நான்முகன் தோன்றுகின்றார் உபய நாச்சிமார்களோடு (ஸ்ரீ தேவி, பூதேவி) இருக்கிறார். ஆழ்வார் இந்த திருவனந்தபுரத்தை பரமபதம் போல் பாவித்திருக் கிறார்.

அழகான பாசுரம்.

``கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடம்உடை அரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடம்உடை வயல் அனந்தபுரநகர் புகுதும்இன்றே’’

“கேசவா” என்று அவன் மூன்றெழுத்துத் திருநாமத்தைச் சொன்னால் போதும். இடரென்று பேர் பெற்றவையெல்லாம் கெடும். விஷமுள்ள பாம்பைத் தன்னுடைய படுக்கையாகக் கொண்டு அழகான வயல் சூழ்ந்த அனந்தபுர நகரில் பள்ளிகொண்ட பெருமாளை நாம் சென்று ஒருமுறை அவர்முன் “கேசவா” என்ற திருநாமத்தைச் சொன்னால் நமக்கு நோய் வராது. வினைகளால் ஏற்படும் சங்கடங்கள் நேராது.

பொதுவாக சகஸ்ர நாமமும் கூற வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. அவ்வளவும் கூறமுடியுமா? எல்லோராலும் முடியாது. அவர்களுக்கு என்ன செய்வது? ஆழ்வார் எளிய வழியைக் கூறுகிறார் மாயன் நாமம் ஒன்று ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பர் ஊரே ஒரே ஒரு நாமம் சொன்னால் போதும் ஆயிரம் நாமம் சொன்ன பலனும் கிடைத்துவிடும் என்பதால் திருவனந்தபுரம் பதிகத்தை ‘‘கெடும் இடாராய எல்லாம் கேசவா’’ என்று ஆரம்பிக்கிறார்.

கேசவன்’ என்னும் திருநாமத்திற்குப் பல பொருள்களுண்டானாலும் கம்ஸனது ஏவுதலால் தன்னை நலியக் குதிரை வடிவு கொண்டு திருவாய்ப்பாடியிலே வந்து கேசி என்னும் அஸுரனை வதம் செய்தவனென்று பொருள் கொள்ளுதல் இங்கு பொருத்தம்..“அவன் ஒரு விரோதியைப் போக்கினபடியைச் சொல்ல, விரோதி என்று பேர்பெற்றவை எல்லாம் நசிக்கும்’’ என்பது ஈடு.
பகவானின் முக்கியமான 12 நாமங்களில் (துவாதசநாமங்கள்) பத்மநாபன் என்கிற திருநாமமும் ஒன்று. அந்த திருநாமத்தோடு இங்கே எழுந்தருளுகிறார்.

திருவனந்தபுரம் சாதாரண திவ்ய தேசம் அல்ல. அமரர்கள் வந்து இறைவனை வணங்கும் திவ்ய தேசமாயிற்று அவர்கள் பாற்கடலுக்குப் போய்ப் பார்க்கிறார்கள் ஆனால் அந்தத் தேவாதிதேவன் திருவனந்தபுரத்தில் பள்ளிகொண்ட பெருமாளாக எழுந்து அருளியிருப்பதை அறிந்து இங்கே வந்து அர்ச்சனை செய்கிறார்கள். அமரர் கோனாகிய இந்திரனும் இங்கே வந்து வணங்கி நிற்கிறான். இத்தனைப் பெருமை பெற்ற திவ்ய தேசத்திற்கு ஒருமுறை நாமும் அவசியம் செல்ல வேண்டுமே வாருங்கள். செல்வோம் என்று எல்லோரையும் ஆழ்வார் அழைக்கிறார். அற்புதமான அந்தப் பாசுர வரிகளைப் பாருங்கள்.

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே
ஆழ்வார் பாடிய பாசுரங்களைப் பாட மனம் உருகும். அவ்வளவு அருமையான பாசுரங்கள்.

எம்பெருமானார் (ராமானுஜர்) இத்தலத்துக்கு வந்திருக்கிறார். இங்கு பூஜை விதிகளை மாற்ற சில யோசனைகள் தெரிவிதிருக்கிறார். அங்கு வழி வழியாகத் தொண்டு செய்த அர்ச்சகர்கள் இந்த யோசனையைக் கேட்டு பயந்தனர். தங்கள் பழக்கம் மாறுகிறதே என்று தயங்கினர். பத்ம நாபனிடம் தங்கள் மனக்குறையைச் சொல்லி பிரார்த்தனை செய்தனர். பெருமானும் மனம் இரங்கி, ‘‘இச்சீர் திருத்தம் இங்கு வேண்டாம். வழிவழியாக எந்தப் பூஜை முறையைச் செய்து நம் அடியார்கள் வணங்கினார்களோ அதே மாதிரி தொடரட்டும்’’ என்று சொல்லி எம்பெருமானாரை திருகுருங்குடி திருப்பதிக்கு சென்று சேர்த்தான் என்ற வரலாறு உண்டு.

கோயிலுக்குள்ளே ஒரு அழகான மண்டபம் உண்டு. குலசேகர மண்டபம் என்று அழைக்கப்படும் மண்டபத்தில் பல இசைத் தூண்களைக் காணலாம். சப்தஸ்வர மண்டபம் என்று சொல்கிறார்கள். நம்மாழ்வார் பாடுகின்றார். ஏழு ஜென்மத்திற்கும் எந்த தீவினையும் சேராதிருக்க ஒரு வேலை செய்யுங்கள், திருவனந்தபுரம் பத்மநாபன் ஒருமுறையாவது தரிசியுங்கள் என்கிறார். நாமும் சென்று ஒரு முறை சேவிப்போமே.

*1686-ல், தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-ல் அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் மரத்தாலான மூலமூர்த்தி அகற்றப்பட்டு, 12008 சாளக்கிராமத்தினாலும் ‘‘கடுசர்க்கரா’’ என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது ‘‘அனந்தசயன மூர்த்தி’’ பிரதிஷ்டை செய்யப்பட்டது.

* அரசராக பத்மனாபஸ்வாமியே இங்கு கருதப்படுவதால், பிரித்தானிய ஆட்சியாளர் 21 குண்டுகள் மூலம் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய ராணுவமும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது.

* ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோயில் அமைந்துள்ள இடமானது பரசுராமரின் சேத்திரம் எனப்படும், ஏழு சேத்திரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

* இங்கு அனுமான் மீது சாத்தப்படும் வெண்ணெய் எவ்வளவு நாளானாலும் எந்த வெயில் காலத்திலும் உருகுவதுமில்லை, கெட்டுப் போவதுமில்லை என்று சொல்கின்றனர்.

* கோயிலின் கர்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டதாகும், எனவே அதனை ‘‘ஒற்றைக்கல் மண்டபம்’’ என்றும் அழைப்பதுண்டு.

*விதவிதமான நைவேத்தியங்கள். ரத்தின பாயசம் என்பது ரத்தினக் கற்கள் இழைத்த தங்கப் பாத்திரத்தில் படைத்த பாயச வகைகள். மேனி துலா பாயசம் எனப்படும் அரிசி மற்றும் வெல்லத்தால் செய்த சர்க்கரைப் பொங்கல் ஒற்றைத் துலா பாயசம், பால் மாங்கா, பந்தரனு கலப் பாயசம், மற்றும் பால் பாயசம் வியாழக்கிழமைகளில், இறைவன் நரசிம்ஹருக்கு பானக நைவேத்தியம் உண்டு. பெருமாளுக்கு உண்ணி அப்பம், மோதகம், வெல்லத்துடன் கூடிய அவல் பிரசாதம் என வகைவகையான நைவேத்தியங்கள் உண்டு.

* இந்தக் கோயிலில், லட்சதீபம் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள், அன்று நூறாயிரம் விளக்குகள் (அல்லது ஒரு லட்சம்) எண்ணெய் விளக்குகள் கோயிலைச் சுற்றி எரியவிடப்படும். இந்தத் திருவிழா மிகவும் தனிப்பட்டதாகும். மேலும், ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதாகும்.

* தரிசனம் செய்வதற்கான நேரம் (காலை நேரம்) 3.30-4.45, 6.30-7.00, 8.30-10.00, 10.30-11.00, 11.45-12.00, (மாலை நேரம்) 5.00-6.15 மற்றும் 6.45-7.20.

* திருக்கோயிலின் நடைபெறும் முக்கியமான திருவிழாக்கள்.

* பங்குனி மாதமும் ஐப்பசி மாதமும் நடைபெறும் பிரம்மோற்சவ பெருவிழா.

* ஆராட்டு விழா.

* மகாராஜா ஊர்வலமாக சுவாமிகளோடு சென்று வருவார். சுவாமிக்கு ஆராட்டு (தீர்த்தவாரி) நடைபெறும். இந்த ஆராட்டு விழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் கூடுகின்றனர்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீ ராம்

 

The post திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Ananta Padmanabhan ,Nammalwar ,Perumal ,Thiruvananthapuram Anantha Padmanapan ,
× RELATED மலையாள நடிகையின் புகாரில் பலாத்கார...