- கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு ரயில்வே சுரங்கப்பாலம்
- கோவில்பட்டி
- இளையரசநேந்தல்
- கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை ரயில்வே சுரங்கம்
- தின மலர்
*கடைக்காரர்கள் எதிர்ப்பு, பொதுமக்கள் அடுத்தடுத்து மறியலால் பரபரப்பு
கோவில்பட்டி : கோவில்பட்டியில் இருப்புப்பாதையை கடக்கும் 3 பகுதிகளில் மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதில், ரயில் நிலையம் அருகேயும், மேற்கு பகுதியில் உள்ள இருப்புப்பாதை பகுதியிலும் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், இளையரசனேந்தல் சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்க அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு சுரங்கப்பாதை அமைக்க முடிவெடுக்கப்பட்டு, ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2014-ல் பணிகள் தொடங்கி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த சுரங்கப்பாதையின் இரு புறமும் அணுகு சாலை அமைக்கப்படாததால், அப்பகுதியில் உள்ள ஜமீன்பேட்டைத் தெரு, பெரியார் தெரு, கோபால்செட்டி தெரு, நடராஜபுரம் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் சுரங்கப்பாதையின் இருபுறமும் 5.5 மீட்டர் அளவில் அணுகு சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின.
ஆனால் அப்பகுதியில் உள்ள கடைகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தை நாடியதால் பணிகள் கிடப்பில் கிடந்தன. இதற்கிடையே நேற்று முன்தினம் இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் இருபுறமும் அணுகு சாலை அமைப்பதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தவும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத்துறை (நபார்டு), காவல்துறை மற்றும் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுடன் வந்திருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கிய போது அப்பகுதியைச்சேர்ந்த வணிக நிறுவனத்தினர் ஒத்துழைப்பு தராத காரணத்தினால் பணிகள் தடைபட்டது. மேலும் அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆவணங்களின் படி மீண்டும் அளவீடு செய்யப்பட்டது. அப்போது சாலைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மதிமுக நகர்மன்ற உறுப்பினர் மணிமாலா தலைமையில் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது.
நீதிமன்ற உத்தரவை காண்பித்து விட்டு ஆக்கிரமிப்பு மற்றும் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என அங்குள்ள வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு உத்தரவு இருக்கிறது என்றால் எதற்காக இவ்வளவு தாமதமாக பணி தொடங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது நெடுஞ்சாலை துறை அதிகாரிக்கும், நகர்மன்ற தலைவருக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. அவர்கள் இருவரையும் போலீசார் சமாதானப்படுத்தினர்.
நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து மீண்டும் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக கூறினர்.
ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகர்மன்ற தலைவர், அப்பகுதி மக்கள் உள்ளிட்டோர் கோட்டாட்சியர் மகாலட்சுமியை நேரில் சந்தித்தனர். இதில் நீதிமன்ற உத்தரவு இருந்தால் உடனடியாக ஆக்கிரமிப்பு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாலை 3.20 மணிக்கு ஆக்கிரமிப்பு மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி ஜேசிபி இயந்திரம் மூலம் தொடங்கியது. இதில் முதல் கட்டமாக சாலையோரம் இருந்த வணிக நிறுவனங்களின் படிகள் மற்றும் முன் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்பட்டது. முழுவதுமாக ஆக்கிரமிப்புகள் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும், அதற்கு அளவீடு செய்யப்பட்ட இடம் வரை கட்டிடங்களை அகற்ற வேண்டும் எனக்கூறி 3-வது முறையாக நகர்மன்ற உறுப்பினர் மணிமாலா தலைமையில் அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை தொடங்கினர். அப்பகுதியில் உள்ள கட்டிடத்தில் தனியார் செல்போன் நிறுவன கோபுரம் உள்ளது.
மேலும் மின் வயர்களை துண்டித்து மின் கம்பங்களை அகற்ற வேண்டும். தற்போது பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. அடுத்தடுத்த நாட்களில் அளவீடு செய்யப்பட்ட இடம் வரை நிலம் கையகப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொள்ளாமல் அப்பகுதி மக்கள் தொடர்ந்து மறியலை தொடர்ந்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் வட்டாட்சியர் சரவணபெருமாள், நெடுஞ்சாலைத்துறை (நபார்டு) உதவி பொறியாளர் பிரேம்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இளையரசனேந்தல் சாலையில் வணிக நிறுவனங்கள் ஆக.16ம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து காலி செய்து விடுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்றுள்ளன.
அதனால் 16ம் தேதிக்கு பின்னர் ஆக்கிரப்புகள் மற்றும் கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர். மின் இணைப்பை துண்டிப்பதற்கு நாளை (இன்று) மின்வாரியத்துக்கு கடிதம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.மறியலையொட்டிநூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு ரயில்வே சுரங்க பாலம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.