×
Saravana Stores

மாநிலங்களவையில் பரபரப்பு: ஜெகதீப் தன்கர்- ஜெயா பச்சன் இடையே காரசார மோதல்.! உறுப்பினர்களை மரியாதை குறைவாக நடத்துவதாக புகார்

புதுடெல்லி: மாநிலங்களவையில் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் ஜெயா பச்சன் இடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநிலங்களவையில் பாஜக எம்பி கான்ஷியாம் திவாரிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில், திவாரிக்கு ஆதரவாக அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த விவகாரத்தில் நடிகையும்,சமாஜ்வாடி எம்பியுமான ஜெயா பச்சன் பேச எழுந்தார். அப்போது அவரை,’ஜெயா அமிதாப் பச்சன்’ என்று கூறி தன்கர் பேச அனுமதித்தார். இதையடுத்து ஜெயா பச்சன் பேசுகையில்,’ ஜெயா அமிதாப் பச்சன் சொல்ல விரும்புகிறேன். நான் ஒரு நடிகை. எனக்கு உடல் மொழி, குரலின் வெளிப்பாடுகள் மற்றவர்களை விட நன்றாக புரியும். இதை சொல்வதற்காக என்னை மன்னிக்க வேண்டும். ஏனெனில் உங்கள் தொனி ஏற்கத்தக்கதாக இல்லை. நாங்கள் சக உறுப்பினர்கள், நீங்கள் அவைத்தலைவர்.

ஆனால் நீங்கள் அவையை நடத்தும் விதம் நான் பள்ளிக்கு சென்ற ஞாபகத்தை ஏற்படுத்துகிறது’ என்றார். இதனால் ஜெகதீப் தன்கர் கடும் கோபம் அடைந்து குறுக்கிட்டு,’ போதும். நீங்கள் அமருங்கள். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், நீங்கள் ஒரு சினிமா பிரபலமாக இருக்கலாம், நீங்கள் அவையை புரிந்து கொள்ள வேண்டும், இல்லை’ என்றார். அப்போது ஜெயாபச்சனை சினிமா பிரபலம் என்று எப்படி அழைக்கலாம் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆட்சேபனை தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோதல் காரணமாக மாநிலங்களவை பல முறை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் வெளிநடப்பு செய்தனர்.

வெளியே சென்றதும் மாநிலங்களவை உறுப்பினர்களை மரியாதை குறைவாக நடத்தும் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஜெயா பச்சன் வலியுறுத்தினார். அவர் கூறுகையில்,’ மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உறுப்பினர்களை மரியாதை குறைவாகப் பேசுகிறார். அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் பேசும் விதமும் ஏற்க முடியாதவையாக இருக்கின்றன. நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. பள்ளி மாணவர்களும் அல்ல. எங்களில் பலர் மூத்த உறுப்பினர்கள். எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது அவரது மைக்கை அவைத் தலைவர் அணைத்தார். அவர் எவ்வாறு அப்படி செய்யலாம்? எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச அனுமதித்திருக்க வேண்டும். மேலும் நாடாளுமன்றத்தில் ஜெகதீப் தன்கர் வரம்பு மீறி பேசுகிறார்.

அவர் பயன்படுத்தும் வார்த்தைகளை பொதுவெளியில் சொல்ல முடியாது. சில நேரங்களில் உங்களால் தொல்லையாக இருக்கிறது எனக் கூறுகிறார். உங்களுக்கு புத்தி குறைபாடு உள்ளது என்கிறார். நீங்கள் திரைப்பட பிரபலமாக இருக்கலாம்; அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை என என்னைப் பார்த்து ஜெகதீப் தன்கர் கூறினார். நான் 5வது முறை நாடாளுமன்ற உறுப்பினர். நான் என்ன சொல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். தற்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசப்படும் முறை முன்பு இல்லாதது. பெண்களை அவமதிக்கிறார். என்னைப் பற்றி ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் பேசியதற்காக ஜெகதீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். அப்போது காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் உடன் இருந்தனர்.

ஆக.12ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் முன்கூட்டியே ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22 தொடங்கி ஆக.12 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேச உரிய முறையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்பிக்களும் குற்றம் சாட்டினர். மேலும் அவைத்தலைவராக இருக்கும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மீதும் அவர்கள் புகார் கூறினார்கள். இது தொடர்பாக நேற்று மோதல் வெடித்தது. இதனால் ஆவேசம் அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்னையால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி , 2.30 மணி, 3 மணி என அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 3.30 மணிக்கு அவை கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் அவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார். ஆக.21ம் தேதி வரை அவை நடைபெற இருந்த நிலையில் ஒரு நாள் முன்னதாக அவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதே போல் மக்களவையும் ஒருநாள் முன்னதாக காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.

The post மாநிலங்களவையில் பரபரப்பு: ஜெகதீப் தன்கர்- ஜெயா பச்சன் இடையே காரசார மோதல்.! உறுப்பினர்களை மரியாதை குறைவாக நடத்துவதாக புகார் appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha ,Jagadeep Dhankar ,Jaya Bachchan ,NEW DELHI ,Speaker ,BJP ,Ganshyam Tiwari ,Mallikarjun Kharge ,Tiwari ,Dinakaran ,
× RELATED பாஜ எம்பிக்கள் திட்டமிட்ட சதி...