பெரம்பூர்: வியாசர்பாடி கிருஷ்ணசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயம் மதன் (28), ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு, கடந்த இரண்டரை மாதத்திற்கு முன்பு ஐடி துறையில் பணிபுரியும் ஜெனிபருடன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் காலை ஜெனிபர் வேலைக்கு சென்ற நிலையில், ஜெயம் மதன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மாலையில், வேலை முடித்து ஜெனிபர் வீட்டிற்கு வந்தபோது, ஜெயம் மதன் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த வியாசர்பாடி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ஜெயம் மதன் தனது மனைவிக்கு கடிதம் ஒன்று எழுதி வைத்தது தெரிந்தது. அதில் எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை, என்னை மன்னித்துவிடு, என எழுதி இருந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: வியாசர்பாடி பி-கல்யாணபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பெயின்டர் விநாயகமூர்த்தி (45). இவரது மனைவி மாலா அண்ணாசாலையில் உள்ள ஐ.டி கம்பெனியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் கலைச்செல்வி (22), பட்டப்படிப்பு முடித்துவிட்டு, கடந்த 4 நாட்களாக சென்னை பல்கலைக் கழகத்தில் தற்காலிக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று, மாலையில் வீடு திரும்பிய கலைச்செல்வி மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது.
இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர். அதில், புதிதாக வேலைக்குச் சென்ற இடத்தில் கம்ப்யூட்டரில் வேலை செய்வதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது, எனக்கு வேலை புரியவில்லை என தனது தந்தையிடம் கூறி கலைச்செல்வி வருத்தப்பட்டது தெரியவந்தது. இதன் காரணமாக தற்கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். அதற்கு தந்தை இந்த வேலை பிடிக்கவில்லை என்றால் வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம் என கூறி வந்துள்ளார். இதனால் வேலை பிடிக்கவில்லை என்ற விரக்தியில் கலைச்செல்வி தூக்கு மாட்டி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இது குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திருமணமான இரண்டரை மாதத்தில் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: மனைவிக்கு எழுதிய கடிதம் சிக்கியது appeared first on Dinakaran.