பரபரப்பாக நடந்த ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தானின் நதீம் அர்ஷத் (92.97 மீட்டர்) தங்கப் பதக்கமும், இந்தியாவின் நீரஜ் சோப்ரா (89.45 மீட்டர்) வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினர். யாருமே எதிர்பாராத வகையில் 2 முறை 90 மீட்டருக்கு அதிகமாக ஈட்டி எறிந்து நதிம் அர்ஷத் ஒலிம்பிக் சாதனையுடன் முதலிடம் பிடித்தார். 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் நார்வேயின் ஆந்த்ராஸ் தோர்கில்ட் 90.57 மீட்டர் தூரம் எறிந்து படைத்த சாதனையை நதீம் முறியடித்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று மகத்தான சாதனை படைத்த நீரஜ் தொடர்ந்து 2வது முறையாக தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். பைனலில் நதீம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் மிக இயல்பாக செயல்பட்டார். அதே சமயம், கோடிக் கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு காரணமாக கடும் நெருக்கடியுடன் களமிறங்கிய நீரஜ், வழக்கத்துக்கு மாறாக பதற்றத்துடன் ஈட்டி எறிந்தார்.
இதனால், மொத்தம் 6 வாய்ப்பில் அவர் ஒரே ஒரு வாய்ப்பை மட்டுமே சரியாகப் பயன்படுத்தி வெள்ளி வென்றார். மற்ற 5 வாய்ப்புகளிலும் தவறிழைத்து வீணாக்கினார். விளையாட்டில் பரம எதிரிகளாகக் கருதப்பட்டாலும் நீரஜ், நதீம் இடையே நல்ல நட்பு நிலவுகிறது. ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர மரியாதை வைத்துள்ள இருவரும், அன்பையும் சகோதரத்துவத்தையும் பகிர்ந்துகொள்ளத் தவறியதே இல்லை. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக நதீம் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ஈட்டி பழுதாகி, புதிய ஈட்டி வாங்க வழியில்லாமல் தவித்தார். இதை அறிந்த நீரஜ், மிகத் திறமையான வீரரான நதீமுக்கு விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய முன் வரவேண்டும் என தனது சமூக வலைத்தள பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தார். இதன் பலனாக உதவிகள் குவிய, இப்போது தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஏழை கொத்தனார் குடும்பத்தை சேர்ந்த நதீம்.
The post இக்கட்டான கட்டத்தில் நதீமுக்கு உதவிய நீரஜ் appeared first on Dinakaran.