புதுடெல்லி: வங்கதேசத்தில் நடந்த வன்முறையால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் ஷேக் ஹசீனா தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்ட நிலையில், அங்கு நிலைமை இன்னும் சீரடையவில்லை. இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் அளித்த பேட்டியில், ‘வங்கதேசத்தின் நடக்கும் அராஜக சம்பவங்களுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யே காரணம். வங்கதேசத்தில் ஜனநாயகம் திரும்பியவுடன், எனது தாயார் தாய் நாட்டிற்கு திரும்புவார். நிச்சயமாக அவர் மீண்டும் வருவார். ஓய்வு பெற்ற அரசியல் தலைவராக திரும்புவாரா? அல்லது தீவிரமான தலைவராக திரும்புவாரா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வங்கதேச தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் மக்களையும் தங்கள் கட்சியான அவாமி லீக்கையும் கைவிட்டு விட மாட்டார்கள்.
இக்கட்டான சூழலில் மக்களை விட்டு விலகி இருக்கு முடியாது. எனது தாயாருக்கு அடைக்கலம் கொடுத்த இந்திய பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு நன்றி. வங்கதேசத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க அவர் அழுத்தம் கொடுக்க வேண்டும். வங்கதேசத்தில் தற்போது இந்திய எதிர்ப்பு சக்திகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவாமி லீக் கட்சியை நாட்டில் இருந்தே வெளியேற்ற ஐஎஸ்ஐ வேலை செய்து வருகிறது. சர்வதேச அழுத்தத்தின் மூலம் வங்கதேசத்தில் இருக்கும் அவாமி லீக் தலைவர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்ய முடியும். வங்கதேசம் அராஜக நாடாக மாறி வருகிறது. இரண்டாவது ஆப்கானிஸ்தானாக மாறப் போகிறது. இதை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும். முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய இடைக்கால அரசு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்’ என்றார்.
The post மீண்டும் என் தாயார் தாயகம் திரும்புவார்; வங்கதேச அராஜகங்களுக்கு ஐஎஸ்ஐ-யே காரணம்: ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் பகீர் பேட்டி appeared first on Dinakaran.