×
Saravana Stores

பயிர்களுக்கு திரவ உயிர் உரங்களை பயன்படுத்துங்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

 

சிவகங்கை, ஆக. 9: பயிர்களுக்கு திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வேளாண்மை இணை இயக்குந (பொ) லட்சுமிபிரபா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:உயர் விளைச்சல் ரகங்களுக்கு ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படும். ரசாயன உரங்களை தொடர்ச்சியாக பயிர்களுக்கு இடுவதால் மண்ணின் தன்மை மாறுபாடு அடைந்து மண்வளம் குன்றி மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து வருகிறது.

இதனை தவிர்க்க உயிர் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை பயன்படுத்துவது அவசியம். மண்ணில் உள்ள உயிரியல் செயல்பாட்டை அதிகப்படுத்தி மண் வளத்தை பாதுகாப்பதன் மூலம் நீடித்த நிலையான வேளாண்மைக்கு வழி வகுக்கலாம். திரவ உயிர் உரங்களில் உள்ள அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் நுண்ணுயிர்கள் காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவை மண்ணில் நிலைப்படுத்தி தழைச்சத்தாக மாற்றி வளரும் பயிருக்குவளமூட்டுகிறது.

திரவ உயிர் உரங்களைபயன்படுத்துவதன் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை 25சதவீதம் வரை குறைக்கலாம். இதன் மூலம் நிகர சாகுபடி செலவையும் குறைக்கலாம். ரசாயன உரங்களின் பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் மாசடைவதும் குறைகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் ஒன்பது வகையான திரவ உயிர் உரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. உயிர் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்ககூடாது.

குறைந்தவெப்பத்தில் நேரடி சூரிய வெப்பம் படாமல் பாதுகாத்து வைக்கவேண்டும். விதைகளை பூஞ்சான கொல்லியுடன் விதை நேர்த்தி செய்து பின்பு கடைசியாக உயிர் உரங்களுடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். திரவ உயிர் உரங்கள் 500 மில்லி ரூ.150 ஆகும். எனவே விவசாயிகள் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி மண் வளம் காத்து அதிக மகசூல் பெற்று பயன் பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பயிர்களுக்கு திரவ உயிர் உரங்களை பயன்படுத்துங்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Joint Director of Agriculture ( ,D) Lakshmi Prabha ,
× RELATED ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்