×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து திருப்பம் பா.ஜ முக்கிய தலைவருக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்: சிறையில் உள்ள நாகேந்திரன் தொடர்பு பற்றி தீவிர விசாரணை; சம்பவ செந்தில் கூட்டாளிகளுக்கும் கிடுக்கிப்பிடி

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜ முக்கிய தலைவருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், பொன்னை பாலு கும்பலுக்கு நிதியுதவி, சட்ட உதவி என பக்க பலமாக இருந்து வந்தது சம்பவ செந்தில், சீசிங் ராஜா மற்றும் சிறையில் உள்ள ஒரு ரவுடி என்பது தெரிய வந்துள்ளது. சம்பவ செந்திலை போலீசார் தேடிவரும் நிலையில், பொன்னை பாலு, வக்கீல் அருள், ராமு, வக்கீல் சிவா, ஹரிதரன் ஆகிய 5 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். இதில் பொன்னை பாலு, அருள் 3வது முறையாக போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2 முறையும் பொன்னை பாலு, அருளை விசாரிக்கும்போது பல தகவல்களை கூறியுள்ளனர். மற்றவர்களிடம் விசாரித்தபோது இவர்கள் முரண்பாடான கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 3வது முறையாக பொன்னை பாலு, அருளிடம் போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் பற்றியும் விசாரிக்கின்றனர். சேலம் சிறையில் உள்ள சம்பவ செந்திலின் கூட்டாளி ஈஷா, கட்டிட ஒப்பந்ததாரர் கார்த்திக்கை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சென்னை புதுவண்ணாரப்பேட்டை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக விசாரித்துள்ளனர்.

சம்பவ செந்திலின் நெட்வொர்க் மற்றும் ஈஷா, சம்பவ செந்திலை சந்தித்த இடம், சென்னையில் அவருக்கு யார் யாரெல்லாம் பணம் வசூலித்து கொடுப்பார்கள், ஆம்ஸ்ட்ராங் கொலையில் எந்தெந்த ஊரைச் சேர்ந்த கூலிப்படை கும்பல்களுக்கு தொடர்பு உள்ளது என விசாரித்துள்ளனர். சேலம் மத்திய சிறையில் இருக்கும் சம்பவ செந்திலின் மற்றொரு கூட்டாளியான எலி யுவராஜையும் விசாரிக்க உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தடுத்து ஒவ்வொருவராக போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இதற்கிடையே அரசியல், வழக்கறிஞர் பின்புலம் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனை கைது செய்தனர். இந்த கொலையில் மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்வத்தாமன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தந்தை நாகேந்திரனிடம் தனிப்படையினர் விசாரணை நடத்துகின்றனர். ஸ்டான்லி, சண்முகம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 20 வருடங்களுக்கும் மேலாக நாகேந்திரன் சிறையில் உள்ளார். ரவுடி நாகேந்திரனுக்கு தனி பாதுகாப்பு காவலர் உண்டு. நாகேந்திரன் சிறையில் யாரை சந்திக்கிறார், என்ன பேசுகிறார் என்பதை செல்போனில் வீடியோ கால், ஆடியோ ரெக்கார்டுகள் செய்வது வழக்கம்.

கடிதம் எழுதப்பட்டாலும் அதை ஆராய்ந்த பின்பே அனுப்புவார்கள். ரவுடிகளுக்குள் ரகசிய குறியீட்டில் பேசுவது வழக்கம் என்பதால் அப்படி ஏதும் திட்டமிட்டு பேசப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அவ்வாறு நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏதேனும் உத்தரவு பிறப்பித்தாரா என்பதை விசாரிக்க கடந்த பல மாதங்களாக நாகேந்திரனை சிறையில் சந்தித்த நபர்களின் விவரங்களை வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் தனிப்படை போலீசார் பெற்றுள்ளதாகவும் நாகேந்திரன் யார் யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பல கோடி ரூபாய் நிலம் சம்பந்தமாக பஞ்சாயத்துக்களில் யார் யார் ஈடுபட்டார்கள், யாரை மிரட்டினார்கள் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர். இதில் சில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதால் அதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த கொலையில் சம்பவ செந்திலுக்கு கொலைக்கான வேலையைக் கொடுத்ததாக கூறப்படும் வடசென்னையைச் சேர்ந்த பாஜ மூத்த தலைவருக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மனில் ஆஜராகும்போது, அவருக்கு எதிராக உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

* 3 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3வது முறையாக பொன்னை பாலு, அருள், ராமு, சிவா, ஹரிதரன் ஆகிய 5 பேரையும் தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில், 3 நாள் போலீஸ் காவல் முடிந்து பொன்னை பாலு, அருள், ராமு ஆகிய 3 பேரையும் நேற்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைத்தனர். மேலும் சிவா மற்றும் ஹரிதரன் ஆகிய இருவருக்கும் 5 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளதால் நாளை மாலை வரை அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து திருப்பம் பா.ஜ முக்கிய தலைவருக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்: சிறையில் உள்ள நாகேந்திரன் தொடர்பு பற்றி தீவிர விசாரணை; சம்பவ செந்தில் கூட்டாளிகளுக்கும் கிடுக்கிப்பிடி appeared first on Dinakaran.

Tags : Armstrong ,BJP ,Nagendran ,CHENNAI ,Ponnai Balu ,Arkadu Suresh ,Arul ,Bahujan Samaj Party ,president ,Sambhava Senthil ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி...