புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு சட்ட திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டது. வக்பு சட்டத் திருத்த மசோதா 2024 நேற்று மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. ஒன்றிய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் வக்பு வாரியங்களில் பெண்களை உறுப்பினர்களாக சேர்ப்பது, வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது, ஒன்றிய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வக்பு சொத்துக்களை ஒன்றிய அரசு இணையதளத்தில் பதிவு செய்வது உள்ளிட்ட ஷரத்துகள் இடம் பெற்று இருந்தன. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு எதிராக நோட்டீஸ் வழங்கினார். மேலும் ஒன்றிய அரசு மத சுதந்திரத்திற்கு எதிராக நடப்பதாகவும், அதன் மூலம் கூட்டாட்சி அமைப்பை தகர்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில்,’ இது ஒரு கொடூரமான சட்டம். அரசியலமைப்பின் மீதான அடிப்படைத் தாக்குதல். இப்படி மக்களை பிளவுபடுத்தும் அரசியல் செய்வதால் தான் பாஜவுக்கு மக்கள் பாடம் புகட்டுகிறார்கள். அரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மத சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல். அடுத்து நீங்கள் கிறிஸ்தவர்களுக்குச் செல்வீர்கள், பிறகு ஜெயின்கள் என்று தொடரும். இதுபோன்ற பிரிவினைவாத அரசியலை இந்திய மக்கள் இப்போது ஏற்க மாட்டார்கள்’ என்றார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘பாஜவின் தீவிர ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவே இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. மற்ற மத அமைப்புகளில் இதைச் செய்யாத போது, முஸ்லிம் அல்லாதவர்களை வக்பு வாரியங்களில் சேர்ப்பதில் என்ன பயன்?. உண்மை என்னவென்றால், பாஜ தனது தீவிர ஆதரவாளர்களை திருப்திப்படுத்த இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது’ என்று கூறினார். திமுக எம்பி கனிமொழி பேசுகையில் ‘இந்த மசோதா பிரிவினையை ஏற்படுத்தக்கூடியது. இது அரசியலமைப்புச் சட்டம், சிறுபான்மை மதம் மற்றும் கூட்டாட்சிக்கு எதிரானது. இது எல்லா வழிகளிலும் நீதியைப் புறக்கணிக்கிறது. சிறுபான்மையினர் தங்கள் நிறுவனங்களை நிர்வகிப்பதைக் கையாளும் பிரிவு 30ன் மீது இந்த மசோதா நேரடி தாக்குதலாகும்.
இந்த மசோதா ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைக்கிறது. ஒரு இந்து கோயிலை நிர்வகிக்கும் வாரியத்தில் இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்தவர்களோ அங்கம் வகிக்க முடியுமா. அப்படி இல்லாத போது, அப்படி பதவி வகிக்க முடியாத போது, ஒரு குறிப்பிட்ட மதத்தை நம்பாத ஒருவருக்கு அந்த மதத்தின் சார்பாக முடிவெடுக்க ஏன் உரிமை இருக்க வேண்டும்’ என்று கேள்வி எழுப்பினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) எம்பி சுப்ரியா சுலே பேசுகையில், ‘வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள். மிகவும் வேதனையாக இருக்கிறது. சிறுபான்மையினரைப் பாதுகாப்பது ஒரு நாட்டின் தார்மீகக் கடமை. மசோதாவின் நோக்கத்தையும் நேரத்தையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். நாங்கள் இந்த மசோதாவை எதிர்க்கிறோம், இந்த மசோதாவை அரசு திரும்ப பெற வேண்டும்’ என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் எம்பி முகமது பஷீர் பேசுகையில்,’ இந்த மசோதா அரசியலமைப்பின் 14, 15, 25 26 மற்றும் 30 வது பிரிவுகளை மீறுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் வக்பு அமைப்பு சீர்குலைந்து விடும். இந்த மசோதா வக்பு நிலத்தை ஆக்கிரமிப்பதை ஊக்குவிக்கும். உங்கள் நோக்கம் இந்துக்களையும் முஸ்லீம்களையும் வகுப்புவாத அடிப்படையில் பிரிப்பது. இதை நடக்க விடமாட்டோம்’ என்றார்.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி,’ வக்பு வாரியத்தில் திருத்தங்களைச் செய்ய இந்த அவைக்கு தகுதி இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான கடுமையான தாக்குதலாகும். நீங்கள் முஸ்லீம்களின் எதிரிகள், அதற்கு இந்த மசோதா ஆதாரம்’ என்று கூறினார். தொடர்ந்து மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
இதையடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறுக்கிட்டு,’ 1995ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வக்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து முசல்மான் வக்பு சட்டம், 1923ஐ ரத்து செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. எதிர்க்கட்சிகள் முஸ்லிம்களை தவறாக வழிநடத்துகிறார்கள். தற்போதைய சட்டத்தில் பல தவறுகள் இருப்பதால், அதன் நோக்கத்தை நிறைவேற்ற முடியாததால், திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘வக்பு திருத்த சட்ட மசோதாவை கொண்டு வந்துவிட்டதால் எந்த மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிட முடியாது.
மேலும் வரைவு சட்டத்தில் அரசியலமைப்பின் எந்த விதியும் மீறப்படவில்லை. வக்பு சட்டம் 1995 அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் அரசாங்கத்தால் செய்ய முடியாததை சாதிக்க முன்மொழியப்பட்ட திருத்தங்கள் முயல்கின்றன. வக்பு சட்டம் 1995 ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது. இதை தெரிந்தும் அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றன. மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றன. எந்தவொரு சட்டமும் அரசியலமைப்பிற்கு மேல் இருக்க முடியாது. ஆனால் 1995 வக்பு சட்டத்தில் அத்தகைய விதிகள் உள்ளன.
வக்பு வாரியங்கள் மாபியா கும்பலால் கைப்பற்றப்பட்டதாக பல எம்பிக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளனர். இந்த மசோதாவை உருவாக்குவதற்கு முன்பு விரிவான ஆலோசனைகள் நடந்துள்ளன. உரிமைகளைப் பெறாதவர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் இந்த மசோதா இன்று கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்ப்பதை நிறுத்துங்கள். யார் எதிர்த்தாலும், யார் ஆதரித்தாலும் சரி இது வரலாற்றில் இடம்பெறும். மசோதாவை எதிர்க்கும் முன், ஆயிரக்கணக்கான ஏழைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றி சிந்தித்து அவர்களுக்கு மதிப்பு கொடுங்கள். இருப்பினும் இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப பரிந்துரை செய்கிறேன்’ என்றார்.
* தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா ஆதரவு
வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு பா.ஜ கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா ஆதரவு தெரிவித்தன.
The post மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப முடிவு appeared first on Dinakaran.