×

அனைவரது கோரிக்கைகளையும் தாயுள்ளத்தோடு நிறைவேற்றி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில், கிறித்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிறித்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கீதா ஜீவன், பாடநூல்கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, எம்எல்ஏக்கள் கருணாநிதி, ஐட்ரீம்ஸ் மூர்த்தி, பிரபாகர் ராஜா, ஹசன் மௌலானா, மயிலை த.வேலு, சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை துணைத் தலைவர் நீதிநாதன், தென்னிந்திய திருச்சபை பிரதம பேராயர் தர்மராஜ்ரசாலம், பூஜிதகுருபாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட அனைத்து சமயத் தலைவர்கள், பேராயர்கள் கலந்து ெகாண்டனர்.இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: சிறுபான்மையினருக்கு எல்லா வகையிலான ஏற்றம் வழங்கும் காலமாக திமுக ஆட்சி காலம் தொடங்கி இருக்கிறது. கிறித்துவர்கள் என்றோ, சிறுபான்மையினர் என்றோ ஒருவித அடையாளச் சொல்லாகத்தான் நாம் அதனை பயன்படுத்துகிறோம். நாம் மொழியால் தமிழர்கள் தான். இனத்தால் தமிழர்கள் தான். வழிபாடு என்பது அவரவர் விருப்பம். ஆனால் தமிழர்கள் என்பது பண்பாட்டுப் பிணைப்பு ஆகும். உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுக்கள் முன்னேற்றத்துக்கான பொறுப்புகளையும் ஏற்றிருந்தேன். அப்போது, வள்ளுவர் கோட்டம் அருகில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக ஒரு தனி கட்டடத்தைக் கட்டி, அதன் திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் அழைத்து வந்து திறக்கச் செய்தோம். அதை திறக்கும்போது அக்கட்டடத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டபோது,  உடனடியாக, அவர் அந்தக் கட்டடத்திற்கு ‘அன்னை தெரசா’ என்ற பெயரை சூட்டுங்கள் என்று சொல்லி, இன்று கம்பீரமாக அந்தக் கட்டடம் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.பத்தாண்டு காலமாக பல்வேறு துறைகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் அனைத்தையும் சரி செய்யும் முயற்சியையும் தொடங்கி இருக்கிறோம். ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை ஐந்தே மாதத்தில் செய்திருக்கிறோம் என்பதை அரசியல் எல்லைகளைக் கடந்து பொதுவானவர்களும் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்தோம். அதில் 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். நிதிச் சுமை இருந்தாலும் மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மைகளை, திட்டங்களை நிறுத்தாமல் செய்து வருகிறோம். நாங்கள் சொன்ன அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லி என்னையும் ஏமாற்றி, உங்களையும் ஏமாற்ற நான் தயாராக இல்லை. ஆனால் நிறைவேற்றியே காட்டுவோம், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.  ஏழை, எளிய மக்களாக இருந்தாலும், மகளிராக இருந்தாலும், பழங்குடியினராக இருந்தாலும், இலங்கைத் தமிழராக இருந்தாலும், மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும், திருநங்கையராக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும், அனைவரது கோரிக்கையையும் தாயுள்ளத்தோடு செய்து கொண்டிருக்கும் தமிழக அரசு இன்றைக்கு மக்களுடைய மனதில் நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறது. அன்பு ஒன்றுதான் வாழ்க்கையின் சட்டம். அத்தகைய சட்டப்படி தான் இந்த அரசு செயல்படும். அந்த உணர்வை ஊட்டும் விழாவாக இந்த கிறிஸ்துமஸ் விழா அமைந்திருக்கிறது. இவ்வாறு பேசினார்….

The post அனைவரது கோரிக்கைகளையும் தாயுள்ளத்தோடு நிறைவேற்றி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது அரசு: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Christmas ,Chennai ,Christian Goodwill Movement ,Santhom High School ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...