×

முதுநிலை நீட் தேர்வை தமிழகத்திலேயே எழுதலாம்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் முதுநிலை நீட் தேர்வை தமிழகத்திலேயே எழுதலாம் என தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்பட்ட இளங்கலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் யுஜிசி நெட் தேர்விலும் வினாத்தாள் கசிந்தது. இதனால் அந்த தேர்வும் கடந்த ஜூன் 19ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் எம்.டி, எம்.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான முதுகலை நீட் தேர்வு ஜூன் 23ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு முந்தையை நாள் இரவு திடீரென அந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு வாரியம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட முதுகலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. மேலும், தேர்வு மையங்களின் எண்ணிக்கை முறைப்படுத்தப்படும் எனவும் முதல் முறையாக 2 ஷிஃப்ட்டுகளில் தேர்வு நடத்தப்படும் எனவும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத் தலைவர் தெரிவித்தார். இதனிடையே தேர்வு மைய ஒதுக்கீடு விவரம் ஜூலை 31ம் தேதி வெளியானது. அதில் தமிழ்நாடு மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஊரகப்பகுதிகளில் ஒதுக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் நீட் முதுகலைத் தேர்வு மையங்கள் பல நூறு கி.மீ தாண்டி வெளி மாநிலங்களில் அமைக்கப்பட்டால் எப்படி சென்று வருவது என தமிழக மாணவர்கள் ஏபிபி நாடுவிடம் குமுறியிருந்தனர். ”தமிழ்நாட்டில் மூன்று ஆப்ஷன் க்ளிக் செய்தோம். அதில் கிடைக்காமல் நான்காவதாக வேறு வழியில்லாமல் திருப்பதி ஆப்ஷனை க்ளிக் செய்ததை மையமாக கொடுக்கப்பட்டுள்ளது. திடீரென இவ்வாறு மையங்களை கொடுத்தால் எப்படி சென்று வருவது” என மருத்துவ மாணவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதுகுறித்து அரசும், நாடாளுமன்ற எம்.பி.க்களும் உடனடியாகத் தலையிட்டு தேர்வு மையங்களே சொந்த மாநிலங்களுக்கே மாற்றிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக எம்.பிக்கள் வில்சன், சச்சிதானந்தம் ஆகியோர் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து தேர்வு மையங்களை தமிழ்நாட்டிற்கே மாற்ற வேண்டும் என மனு அளித்தனர்.

இந்நிலையில்தான் எம்.பிக்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு மையங்களை மாற்றி தேசிய தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளது. திருச்சி, அரியலூரைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு ஆந்திர மாநிலம் கர்னூலில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்களுக்கு கரூர் மற்றும் திருச்சியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மையங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post முதுநிலை நீட் தேர்வை தமிழகத்திலேயே எழுதலாம்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,National Examination Board ,Chennai ,National Examinations Board ,National Examinations Agency ,UGC ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...