×

மண்டபம் முதல் மெரீனா வரை 11 நாட்களில் 604 கி.மீ. தூரம் கடலில் சாதனை நீச்சல் பயணம் தொடங்கிய சிறப்புக் குழந்தைகள்

மண்டபம் : சென்னை மெரீனா கடற்கரை வரை நீந்தி சாதனை படைக்கும் நீச்சல் பயணத்தை சிறப்புக் குழந்தைகள் மண்டபத்தில் நேற்று துவக்கினர். தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணையம் சார்பில், ராமேஸ்வரம் அருகே மண்டபம் வடக்கு கடலோர பகுதியில் இருந்து சென்னை மெரீனா கடற்கரை வரை 604 கிமீ தூரத்திற்கு கடலில் நீந்தி சாதனை படைப்பதற்காக, சென்னையை சேர்ந்த 15 சிறப்பு குழந்தைகள், பயிற்சியாளர்களுடன் மண்டபம் பகுதிக்கு நேற்று வந்தனர்.

இதனையடுத்து கடலில் நீச்சல் பயண துவக்க விழா, மண்டபம் வடக்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மீன்கள் விற்பனை கூடாரத்தில் நேற்று அதிகாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீனவ சங்கத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். வேளச்சேரி மாவட்ட விளையாட்டு அலுவலர் லோகநாதன் வரவேற்றார்.

பின்னர் 15 சிறப்பு குழந்தைகள் மூன்று நாட்டுப் படகுகளில் கரையில் இருந்து காலை 6.30 மணியளவில் புறப்பட்டு கடலில் குறிப்பிட்ட தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த 5 பைபர் படகுகளுக்கு சென்றனர். அங்கிருந்து மெரினா கடற்கரையை நோக்கி நீந்தும் பயணத்தை தொடங்கினார்.
இதுகுறித்து பயிற்சியாளர் லோகநாதன் கூறுகையில், ‘‘தினமும் காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை, 12 மணிநேரம் நீச்சல் பயணம் இருக்கும்.

பின்னர் ஒவ்வொரு இரவும் தொண்டி, காட்டுமாவடி, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, பழையாறு, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, மரக்காணம், மகாபலிபுரம், ஈச்சம்பாடி உள்பட கடல் கரையோரம் அருகேயுள்ள பகுதிகளில் தங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். 11 நாட்கள் நீந்தி ஆக. 15ம் தேதி சுதந்திர நாளன்று சென்னை மெரீனா கடலோர பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

The post மண்டபம் முதல் மெரீனா வரை 11 நாட்களில் 604 கி.மீ. தூரம் கடலில் சாதனை நீச்சல் பயணம் தொடங்கிய சிறப்புக் குழந்தைகள் appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Marina ,Chennai Marina Beach ,Tamil Nadu Sports Development Authority ,Rameswaram ,Chennai Marina ,Mandapam to ,
× RELATED மெரினா நீச்சல் குளம் சீரமைப்பு பணி...