×

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் டன் கணக்கில் குவிக்கப்பட்ட விலை போகாத கோழி மீன்கள்: கூடை கூடையாக இலவசமாக அள்ளி சென்ற பொதுமக்கள்

 

திருவொற்றியூர், ஆக. 5: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் டன் கணக்கில் குவிக்கப்பட்ட கோழி மீன்களை, பொதுமக்கள் கூடை கூடையாக இலவசமாக அள்ளி சென்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில், ஆடி மாத அமாவாசை என்பதால் நேற்று மீன்களின் விலையானது குறைவாகவே காணப்பட்டது. மீனவர் தினேஷ் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று நேற்று கரை திரும்பினார்.

அவரது வலையில் கோழி என்ற வகை மீன்கள் டன் கணக்கில் கிடைத்துள்ளது. இந்த மீனின் தோல் மிக தடிமனாக இருக்கும். ஒரே முள் அதன் வால் பகுதி வரை நீண்டு இருக்கும். எளிதில் அதை எடுக்க முடியாத அளவிற்கு முள் குத்தும். விசைப்படகில் இருந்த ஐஸ்கட்டிகள் ஏற்கனவே காலி ஆகிவிட்டதால், டன் கணக்கில் பிடிக்கப்பட்ட aஇந்த மீன்களை சேமிக்க அவரிடம் போதிய ஐஸ் பாக்ஸ்கள் இல்லை. இதனால் விசைப்படையின் மேலே போட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

ஆனால் வரும் வழியிலேயே அந்த மீன்கள் சற்று கெட்டுப் போகும் நிலையில் இருந்தது. எனவே அந்த மீன்களை யாரும் வாங்காததால், ஏலம் விடும் இடத்திலேயே கொட்டி விட்டார். ஒரு மீன் முக்கால் கிலோ முதல் 2 கிலோ வரை இருந்தது. தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என அவர் கூறியதால், கருவாடுக்காக ஒரு சில வியாபாரிகளும், மீன் வாங்க வந்த பொதுமக்களில் பலரும் அதை இலவசமாக எடுத்துச் சென்றனர்.

இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதால் ஏராளமான மீன் வாங்க வந்த பொதுமக்கள் அந்த மீனை பார்த்து தேவையான அளவு எடுத்துச் சென்றனர். இந்த மீன் பொதுவாக சென்னை நகர மக்கள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை. குளிர் பிரதேசங்களில் உள்ள மக்களும், கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளிலும் உள்ள மக்கள் சாப்பிடுவதாக அப்பகுதி மீனவர்கள் கூறினர். ஆனால் இதை காய வைத்து கருவாடாக மாற்றினால் நன்றாக இருக்கும் எனவும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் டன் கணக்கில் குவிக்கப்பட்ட விலை போகாத கோழி மீன்கள்: கூடை கூடையாக இலவசமாக அள்ளி சென்ற பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Kasimedu ,port ,Tiruvottiyur ,Kasimedu fishing harbor ,Aadi ,
× RELATED காசிமேடு விநாயகர் ஊர்வலத்தில்...