×
Saravana Stores

இறக்குமதி செய்வதைக் காட்டிலும் சீன நிறுவனங்களை முதலீடு செய்ய வைப்பதே சிறந்தது: நிதி ஆயோக் உறுப்பினர் கருத்து

புதுடெல்லி: ‘இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, சீன நிறுவனங்களை முதலீடு செய்ய வைப்பதே சிறந்தது’ என நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி கூறி உள்ளார்.கடந்த மாதம் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, சமர்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், சீனாவிலிருந்து அந்நிய நேரடி முதலீடு பெறுவது தொடர்பாக சில பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. கொரோனாவுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சீனாவில் மட்டுமே முதலீடு செய்வதை தவிர்த்து, அதை பரவலாக்க திட்டமிட்டுள்ளன. எதற்கும் சீனாவை மட்டுமே நம்பியிருக்க கூடாது என வளர்ந்த நாடுகள் விரும்புகின்றன. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொள்வதற்கு, சீனாவிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்க வேண்டுமென பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பொருளாதார நிபுணரும், நிதி ஆயோக் உறுப்பினருமான அரவிந்த் விர்மானி கூறுகையில், ‘‘சீனாவிலிருந்து முதலீட்டை பரவலாக்கும் மேலை நாடுகளின் திட்டத்தின் மூலம் இந்தியா பயனடைய உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டியது அவசியம். இதற்காக சீனாவிடமிருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக சீன நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய வைத்து அதே பொருட்களை ஏற்றுமதி செய்வதே சிறந்தது. சீனாவிடமிருந்து இறக்குமதி செய்வதற்கு பதிலாக அவற்றை இங்கே தயாரிக்க நாம் அனுமதிக்கலாம். அதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க செய்ய முடியும்’’ என்றார்.

2023-24ம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனா 118.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (₹9.82 லட்சம் கோடி) இருவழி வர்த்தகத்துக்கு துணை புரிந்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 8.7 சதவீதம் அதிகரித்து 16.67 பில்லியன் டாலராக (₹1.38 லட்சம் கோடி) உள்ளது. இரும்புத் தாது, பருத்தி நூல்,துணிகள், தயாரிப்புகள், கைத்தறி, மசாலாப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பிளாஸ்டிக் ஆகிய பொருட்கள் சீனாவுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே சமயம், சீனாவிலிருந்து இறக்குமதி 3.24 சதவீதம் அதிகரித்து 101.7 பில்லியன் டாலர்களாக (₹8.93 லட்சம் கோடி) உள்ளது. 2022-23ல் 83.2 பில்லியனாக (₹6.90 லட்சம் கோடி) இருந்த வர்த்தக பற்றாக்குறை கடந்த நிதியாண்டில் 85 பில்லியன் டாலராக (₹7.05 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது.

The post இறக்குமதி செய்வதைக் காட்டிலும் சீன நிறுவனங்களை முதலீடு செய்ய வைப்பதே சிறந்தது: நிதி ஆயோக் உறுப்பினர் கருத்து appeared first on Dinakaran.

Tags : Niti Aayog ,New Delhi ,India ,Arvind Virmani ,Union Budget ,Dinakaran ,
× RELATED வரி ஏய்ப்பு புகார்: ட்ரூகாலர் அலுவலகங்களில் வருமான வரி சோதனை