சென்னை: வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவை அடுத்து, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக 300க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்தும், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டும் உயிரிழந்தனர். பலரை இன்னும் மீட்புக் குழுவினர் தேடி வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களாக நீலகிரி, கோவை உள்ளிட்ட சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் மழை நேரத்தில் வருவாய் துறை, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதிக மழை பெய்யும் இடங்களில் கண்காணிப்பு செய்யவும், மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக திண்டுக்கல், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திருப்பூர் என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க அரசு அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். ஏற்கனவே இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post வயநாடு நிலச்சரிவு எதிரொலி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை கண்காணிக்க அரசு உத்தரவு appeared first on Dinakaran.