×
Saravana Stores

தனி மனிதனின் அடிப்படை உரிமை சுத்தமான காற்று!

நன்றி குங்குமம் தோழி

லான்செட் பிளானட்டரி ஹெல்த் (Lancet Planetary Health) என்னும் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில் இந்தியாவில் 2008 முதல் 2019 வரை காற்று மாசு
பாட்டினால் 33,000 பேர் இறந்துள்ளனர் என பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவிலுள்ள அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை, புனே, சிம்லா மற்றும் வாரணாசி போன்ற மாநிலங்களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 33,000 மரணங்கள் என உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த அளவுகளை விட, மோசமான காற்றை சுவாசித்ததால் இறந்துள்ளனர்.

அதிக காற்று மாசுபாடு இல்லாத நகரங்களாகக் கருதப்படும் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற நகரங்களில் கூட குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த ஆய்வின்படி வருடத்திற்கு 12,000 பேர் காற்று மாசினால் உயிரிழக்கின்றனர். இரண்டாம் இடத்தில் உள்ள அகமதாபாத்தில் 2,500 பேரும், பெங்களூரில் 2,100 பேரும் சென்னையில் 2,900 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த வரிசையில் சென்னை நான்காம் இடத்திலும் இருக்கிறது. காற்று மாசுபாட்டினால் மூச்சுக் குழாயில் ஏற்படும் பாதிப்புகளால் இதய நோய்கள், முடக்குவாதம், நீரிழிவு நோய், நுரையீரல் புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. அதுதான் மக்களின் இறப்பிற்கு காரணம். இந்த ஆய்வுகள் குறித்தும் இதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பிரபாகரனிடம் பேசினோம்.

‘‘காற்று மாசு எல்லா நாடுகளிலும் இருக்கக்கூடிய பிரச்னை. காற்றில் உள்ள நுண்துகள்களின் அளவினை கணக்கெடுத்தால் அதன் அளவு உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டின் படி 5 மைக்ரோ அளவை தாண்டினால் அது மாசுபட்ட காற்று. இதில் 40 மைக்ரோ கிராமிற்கு அதிகமாக இருந்தால்தான் காற்று மாசுபாடு என்று இந்தியா ஒரு அளவு கோலை வைத்திருக்கிறது. இந்த அளவு கோலைதான் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா பின்பற்றி வருகிறது.

ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் அளவுபடி பார்த்தால் நாம் மோசமான காற்றையே சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை உலக சுகாதார நிறுவனமே 10 மைக்ரோ கிராம் அளவை தான் வைத்திருந்தது. காலநிலை மாற்றத்தின் அவசர நிலையை புரிந்து கொண்டு அதை 5 மைக்ரோ கிராமாக குறைத்திருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தை போலவே இந்தியாவும் தன்னுடைய காற்று மாசுபாடு அளவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். உலகில் உள்ள 99% நாடுகள் இந்த 5 மைக்ரோ கிராமை தாண்டிதான் இருக்கிறது. இதில் 20 மைக்ரோ கிராம் 10%, 25 மைக்ரோ கிராமை 34% நாடுகள் தாண்டியுள்ளது. மிக மோசமான காற்று மாசுபாடு உள்ள நாடுகள் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில்தான் உள்ளது.

வளர்ந்த நாடுகள் இந்த மாசுபாட்டினை கட்டுப்படுத்திவிட்டன. உலகம் முழுவதும் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் 50 நகரங்களின் பட்டியலில் 42 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை. 131 நகரங்கள் இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கிற பகுதி எனவும் சொல்கிறார்கள். இதில் முதல் இடத்தில் தில்லி, காரணம், அங்கு அதிகமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. ஆனால் தில்லியை விட சென்னையில்தான் அதிகப்படியான வாகனங்கள் இயங்குகிறது. அனல் மின் நிலையங்களும் இங்குள்ளது.

ஆனால் இங்கு காற்றின் தரம் அதிக அளவு பாதிக்காமல் இருக்க முக்கிய காரணம் கடல்தான். கடல் காற்றை உள்வாங்கி ஆக்சிஜனை வெளியிட்டு காற்றை சுத்தகரிப்பு செய்கிறது. சென்னையில் வடபகுதியில் அனல் மின் நிலையம் இருப்பதால் அங்குள்ள காற்றின் தரம் தென் பகுதியை விடை மோசமாக இருக்கும். காற்று மாசுபாட்டினால் இறப்பதை மூன்று விதமாக வகைப்படுத்துகிறார்கள். விறகு அடுப்பில் சமைப்பது, இயந்திரங்களை இயக்கும் போது வெளிவரும் புகை முதல் ரகம். இரண்டாவது தூசி, புகைகளில் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளிவரும் நுண்துகள்கள். இறுதியாக வாகனங்கள் மற்றும் பொருட்களை எரிப்பதால் உண்டாவது. உலகம் முழுவதும் 58% மக்கள் நுண் துகள்களினால், 36% இயந்திர பயன்பாடுகளால், 6% வாகனப் புகையினால் இறக்கின்றனர்.

ஆனால் இந்தியாவில் 50% விறகு மற்றும் இயந்திர பயன்பாடு, நுண்துகள்களினால் 40%, வாகன புகையினால் 10% எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள். சீனாவில் 1990ல் ஆண்டிற்கு 18 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளனர். உடனே விழித்துக் கொண்ட சீனா காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தி, நான்கு லட்ச இறப்புகளாக குறைத்துள்ளது. ஆனால் இந்தியாவில் இன்று வரை ஆண்டிற்கு பத்து லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் இறந்து வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் விறகு அடுப்பு என்று ஆய்வில் கணித்துள்ளனர். இந்த பயன்பாட்டினை குறைத்தாலே இறப்பு விகிதத்தை 75% ஆக குறைக்கலாம்.

இதற்கு முதலில் எல்லா மாநிலங்களிலும் அரசு அனைத்து திட்டங்களையும் கொண்டு வர வேண்டும். சென்னையில் பல வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதால், வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் இங்கு வேலைக்காக வருகிறார்கள். விளைவு மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல். அதிகமான நிறுவனங்கள் ஒரே இடத்தில் இயங்குவதால் அதிலிருந்து வெளிவரும் புகைகளாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எந்த திட்டத்தை வகுத்தாலும் எல்லா மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளித்து அந்தந்த ஊர்காரர்களுக்கு அவர்களுடைய ஊரிலேயே வேலை வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். அனல் மின் நிலையங்களின் பயன்பாட்டினை குறைக்க வேண்டும். மக்களும் இ-வாகனங்களுக்கு மாற வேண்டும். வீடுகளில் விறகு அடுப்பினை தவிர்த்து கேஸ் சிலிண்டர் பயன்பாட்டினை கொண்டு வர வேண்டும். காற்றின் தரத்தை அளவிடும் முறையை மாற்ற வேண்டும். சுத்தமான காற்று தனி மனிதனின் அடிப்படை உரிமை’’ என்கிறார் பிரபாகரன்.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post தனி மனிதனின் அடிப்படை உரிமை சுத்தமான காற்று! appeared first on Dinakaran.

Tags : kumkum dohi ,India ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி சிறப்பாக உள்ளது :சிவன்